Thursday, October 12, 2023

ஆப்ஷன் டிரேடிங் - உளவியல் பார்வை Part - 4

எந்த ஒரு தொழிலிலும் அது பற்றிய அடிப்படைப் புரிதல், அணுகுமுறை, தனது நிலை பற்றி அறிய வேண்டியது ஒவ்வொரு வர்த்தகரின் கடமை.

குறிப்பு: இது ஆப்ஷன் டிரேடிங்கை கற்றுக் கொண்டோ, கொஞ்சம் கற்றுக் கொண்டோ அல்லது கற்றுக் கொள்ளாமலோ ட்ரேடிங் செய்து தினமும் தொடர் நஷ்டம் அடைந்து கொண்டிருப்பவர்களுக்கான விழிப்புணர்வு பதிவு.

ஆப்ஷன் டிரேடிங்கை வெற்றிகரமாக செய்து வருபவர்கள், புரோக்கர்கள், ஆப்ஷன் டிரேடிங் கால்ஸ் கொடுத்து கமிஷன் பெற்று தொழில் செய்பவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம். நன்றி!

வேலை / தொழில் வகைகள்

ஆப்ஷன் வர்த்தகத்தை தொழில் என கருதினால் பின்வரும் அடிப்படையை புரிந்து கொள்ளும் முன்பு ஒரு தொழில் என்பதன் அடிப்படையைப் எளிய உதாரணம் மூலம் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

தனி முதலாளியிடமோ, கார்பரேட்டின் கீழோ, அரசின் கீழோ தின, வார, மாத சம்பளத்திற்கு வேலை பார்ப்பது ஒரு வகை. (WORKER/ EMPLOYEE)

தன் திறமையை வைத்து (FREELANCER) ஆக தொழில் செய்வது இன்னொரு வகை.

தொழிலை வெற்றிகரமாக செய்ய கற்றுத் தருகிறோம், எங்களுக்கு கட்டணம் கொடுங்க; இது மூன்றாவது வகை. (சேவை?!)

தொழில் பற்றிய உளவியல் ரீதியான புரிதல்

வியாபார உலகின் மனநிலை, நிதர்சனம் பற்றிய புரிதல் அவசியம்.

நாட்டில் சட்டத்திற்கு உட்பட்ட பல தொழில்களின் ஒன்றுதான் இந்த ஆப்ஷன் டிரேடிங்கும்.

நமக்கும் டீ-க்கும் டீ குடிப்பதை தவிர வேறு எந்த சம்மந்தமும் இல்லை என்று வைத்துக் கொள்வோம். டீகடை வைப்பதாக முடிவெடுத்தால், கடைக்கான இடம் பார்ப்பது முதல், பொருட்களை வாங்குவது, இண்டீரியர் வடிவமைப்பது, மாஸ்டரை பணிக்கு அமர்த்துவது, என பல வேலைகளை இரவு பகல் பாராமல் செய்து கடை திறந்து கல்லாவில் உட்காரவே குறைந்தபட்சம் 3 மாதம் ஆவதாக வைத்துக் கொள்வோம்.

அந்த 3 லட்சம் முதலீடு போட்ட நாள் முதல், 3 மாத உழைப்பு, அலைச்சல், செலவுகள், பிரச்சனைகள், பஞ்சாயத்து, பேச்சுவார்த்தை, இன்ன பிற வாய்க்கால் தகராறுகள் எல்லாம் முடித்து, நான்காவது மாதம் கடை திறகும் முதல் நாள் முதல் டீ ஆர்டர் வரும் வரை 1 ரூபாய் வருமானம் வராது. இது தெரிந்துதான் கடை எவரும் ஆரம்பிக்கிறார். (90 DAYS = 0 Income)

(இங்கு ஆப்ஷன் டிரேடிங்கையும் ஒரு தொழிலாக நினைத்து செய்து, தொடர் நட்டமடைபவர்கள் தங்களை எப்படி தயார்படுத்திக் கொண்டார்கள் என தங்களை தாங்களே கேட்டுக் கொண்டு பரிசோதனை செய்து கொள்லாம்)

ஏரியாவைப் பொறுத்து 500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை குறைந்தபட்ச தினசரி வருமானம் உறுதி. அல்லது கடை பிரபலமாகும் வரை சராசரி தின வருமானம் 500 (ஆள்கூலி, பொருட்கள் செலவு போக) என்று கூட வைத்துக் கொள்வோம்.

WORST CASE SCENARIO

நாம் தொழிலை விருத்தி செய்வதற்கான வேலைகளை செய்யாதது, கடையை தொடர்ந்து திறக்காமல் இருப்பது, டீ, மற்றும் ஸ்நாக்ஸ் தரம் இல்லாமல் இருப்பது, சர்வீஸ் குறைவு, நிர்வாக திறன் இன்மை, பக்கத்திலேயே ஒரு பெரிய பிராண்ட் FILTER காபி கடை திறப்பு, மற்றும் பல காரணங்களால் கஸ்டமர்ஸ் / வருவாய் குறைந்து சில மாதங்களில் கடையை மூடி விட்டதாகவே வைத்துக்கொள்வோம்.. டீக்கடை தொழில் முயற்சியின் விளைவுகளைப் பார்ப்போம்.

Ø  எந்த ஒரு மோசமான நிலையிலும் 3 லட்சம் முதல் ஒரே நாளிலோ, ஓரே மாதத்திலோ பூஜ்ஜியம் ஆகாது.

Ø  கடையில் உள்ள பாய்லர், சிலிண்டர், தட்டுமுட்டு சாமான்கள் எல்லாம் விற்றால் பாதிக்கு பாதி விலையாவது அதாவது 1.5 லட்சம் திரும்ப வந்துவிடும் (கடை அட்வான்ஸ் உட்பட என்று வைத்துக் கொண்டால்கூட).

Ø புதிய ஒரு தொழிலை தொடங்கிப் பார்த்தோம் என்கிற திருப்தியும், உண்மையில் வியாபாரம் ஆகாத பட்சத்தில், அங்கு ஏன் டீ கடை வியாபாரத்தில் லாபம் வரவில்லை என்கிற லாஜிக்கலான கேள்விக்கு அனுபவபூர்வ பதில் கிடைக்கும்.

Ø  ஓராண்டு டீ கடை அனுபவம் எனக்கு இருக்குப்பா என்று மீண்டும் டீகடையையே வேறு இடத்தில் வைத்துப் பார்க்கலாம் என்று லாஜிக்கலாக முயற்சித்தால், வெற்றிக்கான படிக்கட்டுகளில் சரியாக போய்க் கொண்டிருக்கிறார் என அர்த்தம்.

Ø  அல்லது, எனக்கு வியாபார மனநிலையே இல்லை. ஒரு முறை நட்டமே போதும், இன்னும் என்னால் நட்டம் தாங்க முடியாதுப்பா, மாதம் ஆனால் சம்பளம் வாங்குவதுதான் பாதுகாப்பானது என முடிவெடுக்கும் பட்சத்தில், மாத வேலைக்கு செல்வதும் மிகச் சிறந்த முடிவு. இதனால் தொடர் நட்டம் தடுத்து நிறுத்தப்படுகிறது. கடன் வாங்கி கடை திறந்திருந்தால் கூட, 1.5 லட்சம் உடனடியாக அசலை கொடுத்துவிட்டு, மீதி 1.5 லட்சத்தை மாத தவணையாக ஒன்றரை வருடத்திற்குள் அடைத்து, நிம்மதியடையலாம்.

ஒட்டுமொத்த பார்வை

Ø  எனக்கு புடிச்சிருக்கு, எனக்கான வாழ்க்கைய நான் வாழறேன், நான் சுதந்திரமா தொழில் செய்றேன் என்று நினைத்து தொழில் ஆப்ஷன் டிரேடிங் செய்வது தவறில்லை. தொடர் நட்டமடையும் தொழிலை மேலும் மேலும் செய்வது ஒரு வித போதை (ADDICTION) மாதிரி. பணம், உற்றார் உறவினரோடு சேர்ந்து, மனநலம், மன நிம்மதியும் விட்டு விலகிச்செல்லும்.

நாம் சமுதாயத்திற்காக, கௌரவத்திற்காக வாழ்வதாக வைத்துக் கொண்டால், சமுதாயத்தைப் பொறுத்த வரை குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை - இரண்டிலும் வெற்றி பெற்றவராக இருந்தால்தான் மதிப்பு.

Ø வாழ்க்கையில் வெற்றிகரமாக இருக்கிறோமா என்பதுதான் கேள்வியே தவிர எந்த துறையில் / தொழிலில் வெற்றிகரமாக இருக்கிம் என்பது பொதுவான கேள்வி அல்ல. ஆப்ஷன் டிரேடிங்கை நாமாகத்தான் தேர்ந்தெடுத்துக் கொண்டோம்.

Ø  தொழிலில் எவ்வளவு நட்டம் வரை தாங்க முடியும்? அல்லது எத்தனை காலம் போதிய வருமானம் இல்லாமல் அல்லது குறைந்த வருவாயோடு குடும்பத்தை சமாளிக்க இயலும் என்கிற தெளிவும் உறுதியும் அவசியம்.

Ø  தொடர் நட்டம் ஏற்படுத்தும் பொழுது, 1. அதை முறையாக செய்ய முயற்சிக்கலாம். அல்லது 2. நிறுத்தி விடலாம், இந்த இரண்டில் ஒன்றுதான் நம் மனநலத்தைக் காக்கும்.

Ø  பங்குச் சந்தை மட்டுமல்ல, எந்த தொழிலிலும் கண்மூடித் தனமாக நட்டமடையாமல் இருந்தாலே, என்றாவது தொழில் ஒரு நாள் மேம்படுவதற்கான சாத்தியக் கூறு அதிகம்.

Ø  நம்மை பற்றி நமக்குமே ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்படும் என்பது உறுதி. நமக்கு நாமே உதவி செய்து கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவது மனித வாழ்க்கை. உற்றார் உறவினர்களைப் பாதுகாக்கும் எண்ணத்தோடு உழைத்தால் அது உன்னதமான மனித வாழ்க்கை.

தொடர்ந்து பகிர்வோம். வெற்றிகரமான முதலீட்டாளர்கள் ஆவோம்! நன்றிகள்!-

No comments:

Post a Comment