எப்படியாவது கஷ்டப்பட்டு, சீக்கிரமா வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட வேண்டும் எனறு நினைக்கும் ஒவ்வொருவருக்கும்.
செல்வந்தர் ஆவது
எந்தவித பின்புலமும் (Back ground) ஆதரவும் (Support) விழிப்புணர்வும் (Awareness) இன்றி, வெறும் உழைப்பை அல்லது அறிவை மட்டுமே மூலதனமாக வைத்து பணக்காரர் (Rich) ஆகிவிட முடியும் என்று நம்மில் பலரும் நம்பி போராடிக் கொண்டிருக்கிறோம்.
வாழ்க்கையில் என்றோ கிடைக்கப்போகிற அல்லது கிடைக்காமலே போய்விடும் சாத்தியம் அதிகமுள்ள, அந்த பொருளாதார சுதந்திரம் (Financial Independence) அல்லது நிம்மதி என்கிற ஒரு (செயற்கை / போலி) லட்சியத்தால் தூண்டப்பட்டு தொடர்ந்து உழைக்கிறோம்,
சேமிப்பு (Savings) இல்லை, ஓய்வை (Rest) நினைத்துகூட பார்க்க முடியாது. குறுக்கு வழி, அல்லது சுலபமாக எப்படி செட்டில் ஆகலாம் என்று சில நேரம் யோசனை. பணக்காரர்கள் பரம்பரை பணக்காரர்கள்தான் போல என்றோ, தவறான வழியில் பணம் சம்பாதித்தவர்களாகத்தான் இருக்கும் என்றோகூட நினைப்பு.
வியாபார தந்திரமும் மிடில் கிளாஸ் பரிதாபமும்:
பெரும்பாலான Middle Class மக்களின் இந்த நினைப்புதான், பல மீடியாக்கள், தொழில்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் உலகலாவிய வியாபாரத்திற்கான மூலதனம்.
கடுமையாக உழைத்தால் போதாது, புத்திசாலித்தனமாக உழைக்க வேண்டும் (SMART WORK), உழைக்காமலே பல வழிகளில் வருமானம் (Passive income), ஒரு முறை வேலை, வாழ்நாள் வருமானம், நீங்கள் தூங்கும்போதும் உங்களுக்கு வருமானம் வந்து கொண்டிருக்கும், நீங்கள் விரும்பும் சொகுசு கார், சொந்த வீடு, வெளிநாட்டு சுற்றுலா, பொருளாதார சுதந்திரம், நினைத்ததை ஈர்க்க என (தேவை இருக்கோ இல்லையோ) ஆசைகளைத் தூண்டி சபலத்தில் தள்ளி, அவர்களின் பொருளையோ அல்லது சேவையையோ EMI-யிலாவது வாங்க வைப்பார்கள்.
ஏழையாக இறந்தால் அது உன் தவறுதான் என்பது போன்ற, மோட்டிவேஷன், POSITIVE THINKING என்ற போர்வையில், திரும்ப திரும்ப உணர்ச்சியாக பலமுறை சொல்லி மூளைச்சலவை செய்கிறார்கள். கடுமையாக உழைத்தால் உயரலாம் என்று நம்பி (?) ஏற்கெனவே எந்திரம் போல உழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் மிகச்சுலபமாக அவர்கள் வலையில் விழுகிறார்கள்
எத்தனை நாள்தான் ஒரே வேலையில் மாத சம்பளத்தில், Increment, bonus-ஐ நம்பியே ஓடிக் கொண்டிருப்பது என்று வியாபாரிகள் விரித்த வலையில் நடுத்தர மக்கள் மிகச்சரியாக, வசமாக மாட்டிக் கொள்வார்கள்.
குறைந்த வட்டி, தவணை கடன் திட்டம், உடனடி கடன், ஆன்லைன் கடன், தவணை முறையில் பொருள் வாங்குவது, தள்ளுபடி விலை, Special offers... அனைத்தின் நோக்கமும் இதுதான்.
கவுண்டமணி பாணி
இலவசமாக பினாயில் குடுத்தாலும் இவர்கள் வாங்கி குடிப்பார்கள் என்று கவுண்டமணி காமெடியில் சொல்லும் பரிதாப நிலைதான் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த இன்றும் தொடர்கிறது, பல நவீன வடிவங்களில். கழுத்தை நெறிக்கும் கடன் மற்றும் தேவையற்ற மாதாந்தர கமிட்மெண்ட்களுக்கு இதுவே அடிப்படை காரணம்.
பார்வையில் தெளிவு
இந்த சமுதாய அமைப்பில் எல்லாரும் கோடீஸ்வரன் ஆக முடியாது. பாசிடிவ் திங்கிங் என்று யார் சொல்வதையாவது கேட்டாவது உணர்ச்சிவசத்தால் தூண்டப்பட்டு செயல்பட்டால் கோடீஸ்வரன் ஆவது நிச்சயம். ஆனால் நாம் அல்ல, கம்பெனிகாரர்கள்.
இங்கு கார்பரேட்டுகளுக்கு உழைத்து கொடுத்து, அவர்களை கோடீஸ்வரனாக்குவதே உழைக்கும் மக்களின் சாபக்கேடு என்கிற அருவி திரைப்படத்தின் வசனம் கச்சிதமாக பொருந்துகிறது.
ஐடியாக்கள்
தேவை இல்லாத பொருட்களை வாங்கவே கூடாது (இலவசம், குறைந்த விலை என்றாலும்). தேவையில்லாததை வாங்கினால், தேவையானதை விற்க நேரிடும் என்பதை ஆழ்மனதில் பதிவு செய்துகொள்ள வேண்டும். தேவையான எதையுமேகூட பொறுத்திருந்து, நம் சொந்த சேமிப்பில் இருந்து மட்டும்தான் வாங்க வேண்டும்.
தேவை இல்லாத செய்திகளையோ, வீடியோக்களையோ பார்க்கவே கூடாது.
எல்லோரும் எல்லா விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
யாரைப் போலவும் நாம் மாற வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொருவர் வாழ்க்கையும் தனித்துவமானது, சிறப்பானது.
கார் வைத்துக்கொள்ளும் வசதி வரும்போது பைக் வாங்கணும். பைக் வாங்கும் வசதி வந்தால் சைக்கிள் வாங்கணும். சைக்கிள் வாங்கும் வசதி இருந்தால் நடந்து போகணும்; பொது போக்குவரத்தை பயன்படுத்தணும் என்கிற ஒரே ஒரு தீவிரமான கட்டுப்பாடு மட்டுமே உண்மையில் நமக்கு நிம்மதியையும், சுதந்திரத்தையும் கொடுக்கும்.
போலி கௌரவம் மற்றும் சொகுசு வாழ்க்கைக்கும், உணர்ச்சிகளுக்கும் அடிமையானவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்; வாங்கட்டும்; அவர்களைப் பற்றி படிப்பதையோ, அவர்கள் வீடியோக்களை பார்ப்பதையோ தவிர்ப்போம்.
இந்த எண்ணமும், கட்டுப்பாடும்தான் ஒவ்வொரு மனிதனின் நிரந்தரமான நிம்மதியான, மன உளைச்சல் இல்லாத வாழ்க்கைக்கு 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்கும். இதுதான் நிஜ கோடீஸ்வர வாழ்க்கை.
பரிதாபமான மீடியாக்கள்
பெரும்பாலான ஊடகங்களுக்கென்று நடுநிலைத்தன்மையோ, நேர்மையோ, நேர்மறை சிந்தனையோ, சமூக அக்கறையோ, பொறுப்புணர்ச்சியோ எதுவும் கிடையாது. உண்மையை பெரும்பாலான ஊடகங்கள் சொல்லாது. ஏனென்றால், இங்கு பல ஊடகங்களும், நிபுணர்களும் ஒன்று பணம் சம்பாதிக்க, கட்சியை வளர்க்க, அல்லது இல்லாத ஒன்றிற்கான தேவையை செயற்கையாக உருவாக்கவே செயல்படுகிறார்கள்.
ஒரு செய்தியை நேரில் சென்று, அலசி ஆராய்ந்து நடுநிலையாக எழுத நேரம் ஆகும். TRENDING VIDEO, TALK SHOW, REALITY SHOW, LIVE DEBATE, BREAKING NEWS, FLASH NEWS என்ற வகையில் ஏதாவது ஒன்றை அடிக்கடி கூவிக்கொண்டே இருந்தால்தான் மக்கள் அவர்கள் சேனலை பார்ப்பார்கள் அல்லது பத்திரிக்கையை படிப்பார்கள் என்று அவர்களே திடமாக தவறாக நம்புகிறார்கள்.
சாதாரண செய்தி மற்றும் நிகழ்ச்சியைக்கூட பொழுதுபோக்கு, சுவாரஸ்யம், முதல்முறையாக, லைவ், பரபரப்பு, வேதனை, பயங்கரம், போர், வியாதி, போராட்டம் போன்ற (கவர்ச்சி) வார்த்தைகளை வைத்து மிக அவசியமான செய்தி போல செயற்கையாக சித்தரித்து மக்களை பார்க்க வைப்பது;
ஆபாசம், உணர்ச்சி, வன்முறை, பயம், வேதனை, பதற்றம், கோபம், வெறுப்பு போன்ற எதிர்மறையான உணர்ச்சிகளை மக்களிடையே விதைக்கும் வகையிலான போஸ்டர், டிரெயிலர், விளம்பரம், வீடியோக்களை மக்களின் முகத்தில் எறிவதே அவர்கள் தொழில் யுக்தி. (உணர்ச்சிகளை சுரண்டி நடத்தும் பிழைப்பு)
இவற்றை எல்லாம் உடனே பார்க்காமல், Comment, like, share செய்யாமல், குறிப்பாக SUBSCRIBE செய்யாமல் தள்ளி இருப்பவர்களே நிஜ புத்திசாலிகள், செல்வந்தர்கள், நிம்மதியானவர்கள். புரிந்து நடப்பவர்கள் புனிதர்கள். நன்றி மக்களே!
