Monday, March 28, 2022

ஒரு நிஜ கோடீஸ்வரனின் வாழ்க்கை_Lifestyle matters

எப்படியாவது கஷ்டப்பட்டு, சீக்கிரமா வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட வேண்டும் எனறு நினைக்கும் ஒவ்வொருவருக்கும்

செல்வந்தர் ஆவது

எந்தவித பின்புலமும் (Back ground) ஆதரவும் (Support) விழிப்புணர்வும் (Awareness) இன்றி, வெறும் உழைப்பை அல்லது அறிவை மட்டுமே மூலதனமாக வைத்து பணக்காரர் (Rich) ஆகிவிட முடியும் என்று நம்மில் பலரும் நம்பி போராடிக் கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கையில் என்றோ கிடைக்கப்போகிற அல்லது கிடைக்காமலே போய்விடும் சாத்தியம் அதிகமுள்ள, அந்த பொருளாதார சுதந்திரம் (Financial Independence) அல்லது நிம்மதி என்கிற ஒரு (செயற்கை / போலி) லட்சியத்தால் தூண்டப்பட்டு தொடர்ந்து உழைக்கிறோம்,

சேமிப்பு (Savings) இல்லை, ஓய்வை (Rest) நினைத்துகூட பார்க்க முடியாது. குறுக்கு வழி, அல்லது சுலபமாக எப்படி செட்டில் ஆகலாம் என்று சில நேரம் யோசனை. பணக்காரர்கள் பரம்பரை பணக்காரர்கள்தான் போல என்றோ, தவறான வழியில் பணம் சம்பாதித்தவர்களாகத்தான் இருக்கும் என்றோகூட நினைப்பு

வியாபார தந்திரமும் மிடில் கிளாஸ் பரிதாபமும்:

பெரும்பாலான Middle Class மக்களின் இந்த நினைப்புதான், பல மீடியாக்கள், தொழில்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் உலகலாவிய வியாபாரத்திற்கான மூலதனம்.

கடுமையாக உழைத்தால் போதாது, புத்திசாலித்தனமாக உழைக்க வேண்டும் (SMART WORK), உழைக்காமலே பல வழிகளில் வருமானம் (Passive income),  ஒரு முறை வேலை, வாழ்நாள் வருமானம், நீங்கள் தூங்கும்போதும் உங்களுக்கு வருமானம் வந்து கொண்டிருக்கும், நீங்கள் விரும்பும் சொகுசு கார், சொந்த வீடு, வெளிநாட்டு சுற்றுலா, பொருளாதார சுதந்திரம், நினைத்ததை ஈர்க்க என (தேவை இருக்கோ இல்லையோ) ஆசைகளைத் தூண்டி சபலத்தில் தள்ளி, அவர்களின் பொருளையோ அல்லது சேவையையோ EMI-யிலாவது வாங்க வைப்பார்கள்.

ஏழையாக இறந்தால் அது உன் தவறுதான் என்பது போன்ற, மோட்டிவேஷன், POSITIVE THINKING என்ற போர்வையில், திரும்ப திரும்ப உணர்ச்சியாக பலமுறை சொல்லி மூளைச்சலவை செய்கிறார்கள். கடுமையாக உழைத்தால் உயரலாம் என்று நம்பி (?) ஏற்கெனவே எந்திரம் போல உழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் மிகச்சுலபமாக  அவர்கள் வலையில் விழுகிறார்கள்

எத்தனை நாள்தான் ஒரே வேலையில் மாத சம்பளத்தில், Increment, bonus- நம்பியே ஓடிக் கொண்டிருப்பது என்று வியாபாரிகள் விரித்த வலையில் நடுத்தர மக்கள் மிகச்சரியாக, வசமாக மாட்டிக் கொள்வார்கள்.

குறைந்த வட்டி, தவணை கடன் திட்டம், உடனடி கடன், ஆன்லைன் கடன், தவணை முறையில் பொருள் வாங்குவது, தள்ளுபடி விலை, Special offers... அனைத்தின் நோக்கமும் இதுதான்.  

கவுண்டமணி பாணி

இலவசமாக பினாயில் குடுத்தாலும் இவர்கள் வாங்கி குடிப்பார்கள் என்று கவுண்டமணி காமெடியில் சொல்லும் பரிதாப நிலைதான் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த இன்றும் தொடர்கிறது, பல நவீன வடிவங்களில். கழுத்தை நெறிக்கும் கடன் மற்றும் தேவையற்ற மாதாந்தர கமிட்மெண்ட்களுக்கு இதுவே அடிப்படை காரணம்.

பார்வையில் தெளிவு

இந்த சமுதாய அமைப்பில் எல்லாரும் கோடீஸ்வரன் ஆக முடியாது. பாசிடிவ் திங்கிங் என்று யார் சொல்வதையாவது கேட்டாவது உணர்ச்சிவசத்தால் தூண்டப்பட்டு செயல்பட்டால் கோடீஸ்வரன் ஆவது நிச்சயம். ஆனால் நாம் அல்ல, கம்பெனிகாரர்கள்

இங்கு கார்பரேட்டுகளுக்கு உழைத்து கொடுத்து, அவர்களை கோடீஸ்வரனாக்குவதே உழைக்கும் மக்களின் சாபக்கேடு என்கிற அருவி திரைப்படத்தின் வசனம் கச்சிதமாக பொருந்துகிறது.

ஐடியாக்கள்

தேவை இல்லாத பொருட்களை வாங்கவே கூடாது (இலவசம், குறைந்த விலை என்றாலும்). தேவையில்லாததை வாங்கினால், தேவையானதை விற்க நேரிடும் என்பதை ஆழ்மனதில் பதிவு செய்துகொள்ள வேண்டும்தேவையான எதையுமேகூட பொறுத்திருந்து, நம் சொந்த சேமிப்பில் இருந்து மட்டும்தான் வாங்க வேண்டும்.

தேவை இல்லாத செய்திகளையோ, வீடியோக்களையோ பார்க்கவே கூடாது

எல்லோரும் எல்லா விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

யாரைப் போலவும் நாம் மாற வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொருவர் வாழ்க்கையும் தனித்துவமானது, சிறப்பானது.  

கார் வைத்துக்கொள்ளும் வசதி வரும்போது பைக் வாங்கணும். பைக் வாங்கும் வசதி வந்தால் சைக்கிள் வாங்கணும். சைக்கிள் வாங்கும் வசதி இருந்தால் நடந்து போகணும்; பொது போக்குவரத்தை பயன்படுத்தணும் என்கிற ஒரே ஒரு தீவிரமான கட்டுப்பாடு மட்டுமே உண்மையில் நமக்கு நிம்மதியையும், சுதந்திரத்தையும் கொடுக்கும்

போலி கௌரவம் மற்றும் சொகுசு வாழ்க்கைக்கும், உணர்ச்சிகளுக்கும் அடிமையானவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்; வாங்கட்டும்; அவர்களைப் பற்றி படிப்பதையோ, அவர்கள் வீடியோக்களை பார்ப்பதையோ தவிர்ப்போம்

இந்த  எண்ணமும், கட்டுப்பாடும்தான் ஒவ்வொரு மனிதனின் நிரந்தரமான நிம்மதியான, மன உளைச்சல் இல்லாத வாழ்க்கைக்கு 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்கும். இதுதான் நிஜ கோடீஸ்வர வாழ்க்கை

பரிதாபமான மீடியாக்கள்

பெரும்பாலான ஊடகங்களுக்கென்று நடுநிலைத்தன்மையோ, நேர்மையோ, நேர்மறை சிந்தனையோ, சமூக அக்கறையோ, பொறுப்புணர்ச்சியோ எதுவும் கிடையாது. உண்மையை பெரும்பாலான ஊடகங்கள் சொல்லாது. ஏனென்றால், இங்கு பல ஊடகங்களும், நிபுணர்களும் ஒன்று பணம் சம்பாதிக்க, கட்சியை வளர்க்க, அல்லது இல்லாத ஒன்றிற்கான தேவையை செயற்கையாக உருவாக்கவே செயல்படுகிறார்கள்.  

ஒரு செய்தியை நேரில் சென்று, அலசி ஆராய்ந்து நடுநிலையாக எழுத நேரம் ஆகும். TRENDING VIDEO, TALK SHOW, REALITY SHOW, LIVE DEBATE, BREAKING NEWS, FLASH NEWS என்ற வகையில் ஏதாவது ஒன்றை அடிக்கடி கூவிக்கொண்டே இருந்தால்தான் மக்கள் அவர்கள்  சேனலை பார்ப்பார்கள் அல்லது பத்திரிக்கையை படிப்பார்கள் என்று அவர்களே திடமாக தவறாக நம்புகிறார்கள்

சாதாரண செய்தி மற்றும் நிகழ்ச்சியைக்கூட பொழுதுபோக்கு, சுவாரஸ்யம், முதல்முறையாக, லைவ், பரபரப்பு, வேதனை, பயங்கரம், போர், வியாதி, போராட்டம்  போன்ற (கவர்ச்சி) வார்த்தைகளை வைத்து மிக அவசியமான செய்தி போல செயற்கையாக சித்தரித்து மக்களை பார்க்க வைப்பது;

ஆபாசம், உணர்ச்சி, வன்முறை, பயம், வேதனை, பதற்றம், கோபம், வெறுப்பு போன்ற எதிர்மறையான உணர்ச்சிகளை மக்களிடையே விதைக்கும் வகையிலான போஸ்டர், டிரெயிலர், விளம்பரம், வீடியோக்களை மக்களின் முகத்தில் எறிவதே அவர்கள் தொழில் யுக்தி. (உணர்ச்சிகளை சுரண்டி நடத்தும் பிழைப்பு)  

இவற்றை எல்லாம் உடனே பார்க்காமல், Comment, like, share செய்யாமல், குறிப்பாக SUBSCRIBE செய்யாமல் தள்ளி இருப்பவர்களே நிஜ புத்திசாலிகள், செல்வந்தர்கள், நிம்மதியானவர்கள். புரிந்து நடப்பவர்கள் புனிதர்கள். நன்றி மக்களே! 

எனது யூடியூப் வீடியோக்களை காண 

Sunday, February 20, 2022

கலை மற்றும் பொழுதுபோக்கு - விமான பார்வையில்

கலை 

கலை பொழுது போக்கிறகானது என்று சிலர் கருத்தும் வேளையில் வேறு சிலருக்கு சினிமா சமுதாயத்தை பிரதிபலிக்கும், சீர்திருத்தம் செய்யும் வலிமையான கருவியாகவும் பயன்படுத்தப்பட வேண்டும்..

நாட்டு நடப்பு:

விடுமுறை நாட்களில் வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டோமா, உற்சாகமாக குடும்பத்தார், நண்பர்களோடு சினிமாவிற்கு சென்றோமா, பார்த்தோமா, இடைவேளையில் பாப்கார்ன், குளிர்பானம் ரசித்தோமா, திரும்ப வரும்பொழுது மறக்காமல் உணவகத்தில் ஒரு கட்டு கட்டிவிட்டு வந்தோமா என்று வார இறுதியை திட்டமிட்டு கழித்தாக வேண்டியது நடுத்தர வர்க்கத்தின் சாபக்கேடான பொழுதுபோக்கு.

பொழுதுபோக்கென்றால் செலவு செய்துதான் செய்ய வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. இதைச் சொன்னால், காசில்லாமல் எப்படிப்பா பொழுதைப் போக்குவது என்றும் நம்மை முட்டாள் மாதிரியே பார்க்கும் கூட்டம் இங்கு அதிகம்.

நன்கு யோசித்தால், வார இறுதியில் வெளியில் சுற்றி காசு செலவு செய்து பொழுது பொழுதுபோக்க வேண்டிய கட்டாயம், நிர்பந்தம் எல்லாம் தகவல் தொழில்நுட்ப துறை உள்ளிட்ட பல்வேறு தொழில் வளர்ச்சியின் அடையாளங்கள் என்பது புலப்படும்.

ஃப்ளாஷ் பேக்:

30 முதல் 50 வருடங்களுக்கு முந்தைய காலத்திலும்கூட, பட்டணம் வந்து தொழிற்சாலைகளிலும் நிறுவனங்களிலும் வேலை பார்த்தோர் இருக்கவே செய்திருக்கிறார்கள். பிழைப்பு தேடி வந்தவர்கள், திருமணம், குழந்தைகள் படிப்பு வசதி என்று நகரங்களில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்த வந்தோர் நாளடைவில் நகரங்களிலேயே இருந்துவிட்டனர். இன்று கூட வார இறுதிகளில் சொந்த ஊர்களுக்கு விருப்பமின்றி சென்றுவருவோர் பலர் உளர்.

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள். ஒன்று அடுத்தடுத்த இளம் தலைமுறைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் துறை ரீதியாக நகரங்களில் கிடைத்த வசதிகளையும் தெரிவுகளையும் சொல்லலாம்.

இரண்டாவது.  கிராமத்தில் இருந்த பெற்றோர்கள் இறப்பிற்கு பின்னர், வேறு எந்த விவசாய நிலமோ, இடமோ, சொத்துக்களோ அல்லது வேறு எந்த பிடிப்புமோ இல்லாததும் ஒரு காரணம்.

மேற்சொன்ன இரண்டு பிரதான காரணங்களே பெரும் எண்ணிக்கையிலான கிராம மக்கள், நகரம் நோக்கி பல பத்தாண்டுகளாக தொடர்ந்து படையெடுப்பது குடியேறுவது பின் அங்கேயே நிரந்தரமாக வசிக்கத் தொடங்கிவிடுவதில் பெரும் பாங்காற்றியிருக்கிறது.

எதையும் காசாக்கிக்கொள்ள தொழில்ரீதியாக உழைக்கும் வியாபாரிகள் உலகிற்கு இத்தகைய மக்களின் மனப்போக்கும், நம்பிக்கையுடன் கூடிய எதிர்கால வாழ்விற்கான உழைப்பும் அரும்பெரும் தொழில் வாய்ப்புகளுக்கு வழிகோலிட்டது. அவற்றுள் பள்ளி, கல்லூரிகள், போக்குவரத்து, உணவகங்கள், தங்கும் விடுதிகள், வங்கிகள், அடகு கடைகள், ரியல் எஸ்டேட் தொழில், வணிக வளாகங்கள், நாடகம் மற்றும் தொலைக்காட்சி, சினிமா சார்ந்த பொழுது போக்கு தொழில்கள் போன்றவற்றை குறிப்பிட்டு சொல்லலாம்.

மன்னர்கள் காலத்தில் பொழுதுபோக்கு என்பது முற்றிலும் அரசர்கள் மற்றும் அரச பரம்பரயினர்களுக்கான மனமகிழ்ச்சிக்கானதாகவே பெருமளவு இருந்திருக்கிறது. அவ்வபோது மக்களும் கண்டு களித்திருக்கிறார்கள். ஏழை, நடுத்தர மக்களுக்கு அடிப்படை தேவைகளுக்கான உழைப்பு, நேரம் போக மீதம் இருந்த மிகக் குறைந்த நேரங்களில், குறைந்த வாய்ப்புகளில் கலை பற்றியோ, பொழுதுபோக்கு பற்றியோ சிந்திக்கவும் அதில் ஈடுபடவும் முடிந்திருக்குமா என்பது யதார்த்தமாக யோசித்தாலே விளங்கும்.

அடுத்த காலகட்டங்களில், மக்கள் தொகையும், வேலை மற்றும் தொழில் வாய்ப்புகளும் குறைவாக இருந்த பொழுது, கிராமமும் விவசாயமும், அதுசார்ந்த சிறு வியாபாரங்களுமே பிரதானமாக இருந்த காலகட்டங்களில் மக்களுக்கு ஓய்வெடுக்கவும், உறவினர்களோடு திருவிழா, பண்டிகைகள் என்று கழிப்பதற்கும் நேரம் வெகுவாக இருந்தது.

அப்பொழுதும் பொழுது போக்கு அம்சங்கள் மேடை நாடககங்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த திரையரங்கங்கள் என்பவை அதிகம் மெனக்கெட்டு செய்ய வேண்டிய பொழுதுபோக்கு அம்சங்களாகவே இருந்தன. 15-30 கி.மீ தொலைவில் உள்ள ஊர்களில் உள்ள சினிமாவிற்கு செல்ல, மாட்டுவண்டியோ, குதிரை வண்டியோ, சைக்கிளோ அல்லது பிற வாடகை மோட்டார் வண்டிகளையோ நம்பி இருக்க வேண்டி இருந்தது.

இங்கு ராஜாக்களுக்கு பதிலாக, வசதியான பண்ணையார்கள், தொழிலதிபர்கள், பெரும்வியாபாரிகள் சமூக அந்தஸ்தில் உள்ளவர்களுக்கானதாகவும், அவர்களைச் சுற்றி நிகழ்வதாகவுமே பிரதான கலையும் பொழுதுபோக்கும் இருந்திருக்கிறது.

இடப்பெயர்வு:

நாம் முன்னர் சொன்ன நகர்மயமாதல், காலப்போக்கில் பெருகிக் கொண்டிருக்கும் நேரமே, முன் சொன்ன இரண்டு வகை காலகட்டங்களில் இருந்தும் பெரும் மாற்றம் ஏற்படத் தொடங்கியது.

கிராமங்களில் உள்ளோர் வேலை, தொழில் காரணமாக அந்தந்த மாநிலத்தின் தலைநகர் நோக்கி  வருவதிலும் மாநில தலைநகர்களிலேயே வசித்து வந்தோர் பிறகு வெளி நாடுகளுக்கு சென்று தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதிலும் முனைப்பு காட்ட ஆரம்பித்தார்கள்.

இந்நிலையில், பல தலைமுறைகளாக பொருளாதார, வாழ்வியல் மேம்பாட்டை காரணமாக வைத்து, நகர்புறம் நோக்கி வந்தவர்கள், நாளடைவில் சொந்த கிராமங்களின் வேர்களில் இருந்து முற்றிலும் அறுபட்டுபோய்விட்டார்கள், அதே நேரம் செழிப்பானதொரு வாழ்க்கையை அமைத்து வாழ்ந்து வருகிறோம் என்ற மனநிறைவோடு சொல்லவும் முடியாத வகையிலேயே காலம் அவர்களை வைத்திருக்கிறது.

அடுத்தடுத்த தலைமுறைகளில் இருந்ததையும் தொலைத்துவிட்டார்கள், தேடி வந்த பொருள் இருக்கும் திசை அகப்படாமலும் தத்தளித்து வருகிறார்கள்.

வைரல் காலம்:

இன்றைய சூழலில் அதிநவீன தொழில்துறை மற்றும் ஊடகங்களின் அபரிமிதமான, கவர்ச்சிகரமான, அசுர வளர்ச்சிக்கு இடையில் புழுபோல சிக்கித் தவிக்கும் இந்த நடுத்தர மக்களால் உண்மையில் அலாரம் இல்லாமல் நிம்மதியாக தூங்ககூட முடியுமா? என்கிற கேள்வி ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளாக கேட்டுக்கொள்வதே தன்னைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

அனைவரும் கலையின் மூலமாக மக்களின் கலா ரசனையை மேம்படுத்துவது என்பது உயரிய நோக்கம். ஆனால், தனது தனிப்பட்ட அடையாளங்களை, விருப்பு வெறுப்புகளை பதிவு செய்வது என்பது முற்றிலும் வேறான ஒன்று.

கலையை படைப்பவர்கள் மற்றும் கலையை ரசிப்பவர்கள் இடையே என்றுமே பல்வேறு கோணங்களும், நோக்கங்களும், அணுகுமுறைகளும் வாய்ப்புகளும் இருந்து வந்திருக்கின்றன. இது உண்மையான கலை ரசிகர்களின் ரசனை மற்றும் கலை மீதான நம்பிக்கையையும் அது சிதைப்பதாக அமைந்துவிடுகிறது என்பதுதான் அனைத்து கலைஞர்களும் ரசிகர்களும் கவனத்தில் வைக்க வேண்டிய விஷயம்.

காலம் என்ன சொல்ல வருதுன்னா...

இது பரபரப்பாக வரவேற்கப்பட்டாலும், காலம் நிச்சயம் அனைத்து படைப்புகளின் உண்மை நோக்கத்தையும் அம்பலப்படுத்திவிடும். தகவல் தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான வளர்ச்சியால், அவற்றின் உண்மையான சாயங்கள் வெளிப்பட ஆரம்பித்துவிடும்.

கலை மற்றும் பொழுதுபோக்கின் வடிவம் மட்டுமே மாறிகொண்டேதான் இருக்கும். ஆக எதையுமே ஒரு Bench Mark-ஆக எடுத்துக்கொண்டு கொண்டாட முடியவில்லை என்பது கவலைக்குறிய விஷயம் என்றாலும் ஆங்காங்கே உண்மையான கலைப்படைப்புகள் வெளிவந்த வண்ணம் இருப்பது உண்மையான கலை ரசிகர்களுக்கு சந்தோஷமும் ஆறுதலுமாக இருக்கிறது. நன்றி!

-வெங்கடேசன்.N

எனது யூடியூப் சேனலுக்கு செல்ல: