Sunday, September 19, 2021

காத்து வாக்குல ஒரு ஜாலிபேச்சு

அடேங்கப்பா! உலக சாதனை படைத்த இந்தியா! 

இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலி...! பலமான கடல் அலையின் சத்தத்தையும் மீறி, கோவிந்தின் சட்டைப் பாக்கெட்டுக்குள் இருந்த 6000 ரூபாய் ஃபோன் அலறியது. ஆச்சர்யத்தோடு ஃபோனை எடுத்து காதில் வைத்தார். ”அடே மதி, உனக்கு நூறு வயசு இல்லடா”.

மதி: ஏன்னடா கோவிந்தா, அப்படி சொல்லிட்ட?

கோவிந்த்: நா கொஞ்சம் கூட நினைச்சு பாக்காதப்ப எல்லாம் ஃபோன் பண்ணி சர்ப்ரைஸ் குடுக்கறதா நினைச்சா, அப்படித்தான். சரி, என்ன விஷயம்? 

Illustration by Venkatesan.N

மதி: ஆமா, இப்ப நீ எங்க இருக்க? ஒரே சத்தமா இருக்கு!

கோவிந்த்: பீச்ல!

மதி: என்னது கோவிந்தோ வெளில வந்துட்டாரா?

கோவிந்த்: டேய், நா என்ன காண்டாமிருகமா? கூண்டுக்குள்ள இருந்து வெளில வந்துட்ட மாதிரி ரீஆக்ட் பண்ற...!? தடுப்பூசி போட்டுட்டேன், பீச்சும் திறந்தாச்சு. மாஸ்கும் போட்டிருக்கேன், அதான் வந்தேன்.

மதி: என்ன ஏன் கூப்பிடல? இல்ல, வேற யாரோடவாச்சு வந்திருக்கியா?

கோவிந்த்: அடேய், உன்ன கூப்பிட்டா நீ தனியா வந்தா பரவால்ல, வைரஸோட வந்துட்டீன்னா. ஊசியும் போடல. நா புள்ள குட்டிகாரன்ல. அதான்!

மதி: டேய் அது போன வாரம். இப்ப 2 நாள் முன்னாடி, செப்டம்பர் 17ஆம் தேதி, நம்ம பிரதமர் மோடிஜியோட பிறந்த நாளைக்குன்னு நிறைய SPECIAL VACCINATION CAMPS போட்டாங்கள்ல, அதுல ஒன்னு என் வீட்டு பக்கத்துல இருந்துச்சு, அதான் போய் ஊசி போட்டுகிட்டேன்.

கோவிந்த்: ஆஹா, மதிக்கு மதி வேலை செஞ்சுடுச்சு, சூப்பர். வாழ்த்துக்கள்! இத சொல்லதான் ஃபோன் பண்ணியா?   

மதி: இன்னும் இருக்கு! நீ சுண்டல்காரன் வரானா பாரு, வந்தா 2 பாக்கெட் வாங்கி வை, அதுக்குள்ள நா அங்க இருப்பேன்.

ஃபோனை வைத்த கோவிந்த் கடலலையை ரசிக்கலானார். அதுவே ஒரு தியானம் (MEDITATION) போல இருந்தது. சில நொடிகளில், அவர் தோளைத் தட்டி வந்தமர்ந்தார் மதி.

Illustration by Venkatesan.N

கோவிந்த் (சட்டென திரும்பி) அடேய், சமூக இடைவெளி, சமூக இடைவெளி (SOCIAL DISTANCING)!...  

என சைகையில் தள்ளி உட்காரச் சொல்ல, மதி அவரை காமெடி செய்கிறாரோ என பார்க்க,

கோவிந்த்: நீ தள்ளலன்னா என்ன... நா தள்ளி உட்கார்ந்துக்கறேன்” என்று ஓரிரு அடிகள் தள்ளி அமர்ந்தார். மதி சரிதான்! என்று தலையாட்டினார். சுண்டல் வர, இருவரும் வாங்கினர். சுண்டலுடன் சேர்ந்து கொஞ்சம் கடலையும் ரசித்தனர்.

கோவிந்த்: ஆஹா, பிரமாதம்...!

மதி: இல்லயே! எப்பவும் சாப்பிடற மாதிரிதான இருக்கு பட்டாணி சுண்டல்!

கோவிந்த்: அட அதில்ல சார், ஒரே நாள்ல இரண்டரை கோடி பேருக்கு தடுப்பூசி (COVID VACCINATION) போட்டு இந்தியா உலக சாதனை படைச்சிருக்காமே... அத சொன்னேன்!


தலையாட்டிவிட்டு மதி: ஒரு நிமிஷத்துக்கு 48 ஆயிரம் ஊசி, சும்மா அதிருதுல்ல..!

கோவிந்த்: இதுக்கு முன்னாடியே, செப்டம்பர் 6, ஆகஸ்ட்டு 27, 31-ஆம் தேதிகள்ல, ஒரு நாளைக்கு 1 கோடி தடுப்பூசின்னு போட்டிருக்காங்க.

(மதி தலையாட்ட) குறிப்பா அடுத்த வருஷம் தேர்தல் (ELECTION) வர்ற குஜராத், உத்திரப்பிரதேசம், பஞ்சாப் மாதிரியான 7 மாநிலங்கள்ல 100 சதவீதம் குறைஞ்சபட்சம் முதல் தவணை (FIRST DOSE) தடுப்பூசி (VACCINATION) போட்டு முடிச்சிடணும்னு முடிவெடுத்திருக்காம் அரசாங்கம்.  

மதி: 140 கோடி பேர் இருக்கற இந்தியா மாதிரியான ஒரு நாட்ல, இந்த கணக்கு ரொம்ப பெருசுதான். ஆமா, இதுவரைக்கும் மொத்தம் எவ்ளோ பேருக்கு ஊசி போட்டிருப்பாங்க? இந்த வேகத்துலபோனா எப்பத்தான் எல்லாருக்கும் போட்டு முடிப்பாங்களோ?

கோவிந்த்: 10 கோடி பேருக்கு ஊசி போட்டு முடிக்க 85 நாள் ஆயிருக்கு. இன்னும் சுமார் 1 அரை மாசத்துல 20 கோடி பேருக்கும், இன்னும் 29 நாள்ல 30 கோடி பேருக்கும் போட்டு முடிச்சிடுவோம்னு சுகாதார நிறுவனம் சொல்லிருக்குல்ல.

கோவிந்த்: ஆமா, அதுமட்டுமில்ல மதி, உலக சுகாதார நிறுவனம் (WHO) கூட இந்தியாவ பாராட்டி டுவீட் போட்டிருக்கே! இது பெருமையான விஷயம் தான?!

மதி: வாஸ்தவம்தான்! ஆனா...

கோவிந்த்: ஆனா... சார்கிட்ட இதைவிட சூப்பர் ஐடியா இருக்கோ?

மதி: அதில்ல கோவிந்தோ! அரசாங்கம் இவ்வளவு செஞ்சு என்ன? மக்கள் கொஞ்சமும் விழிப்புணர்வு இல்லாமல்ல இருக்காங்க.

கோவிந்து என்ன சொல்ல வர... என்பது போல பார்க்க,

மதி: சிட்டி பஸ்ல பெரும்பாலான டிரைவர்கள் மாஸ்க் போடறதே இல்ல, என்னாச்சு முகக்கவசத்துக்கு? பெரும்பாலான பஸ்ல ஃபுட் போர்ட்ல தொங்கிட்டு HOUSE FULL-ஆ போயிட்டிருக்காங்க? என்னாச்சு சமூக இடைவெளிக்கு? அட பஸ்ல வச்சிருந்த சானிடைசர் பாட்டில் கூட காணம போச்சு? கவர்மெண்ட் நிர்வாகமும், அதிகாரிகளுமே இப்படி அலட்சியமா நடந்தா, பொதுமக்களுக்கு எப்படிப்பா பொறுப்பு வரும்? வைரஸ் இல்ல வரும்!

யோசித்துவிட்டு கோவிந்த்: “அதனால என்ன, ஹாஸ்பிட்டலுக்கு வருமானமும் வரும் இல்ல...

மதி: மக்கள் வேற 2 வருஷமா பிசினஸ் இல்ல, வேலை இல்ல, கடன் தொல்லைன்னு தவிக்கிற நேரத்துல இது வேறயா? அதுமட்டுமில்ல.... 

(சட்டென குறுக்கிட்டு) கோவிந்த்: மதி..! நல்ல விஷயம் நடந்தா வாய் நிறய பாராட்டினா வயசு கூடும்னு.... (மதி ஆவலோடு பார்க்க) நான் உறுதியா நம்பறேன். உனக்கு அந்த ஆசை இல்ல போல இருக்கு!

மதி: அடேய், இன்னைக்கு நீ என்ன வந்ததுல இருந்து ரொம்ப ஓட்ற.

கோவிந்த்: திருத்தம், வர்றதுக்கு முன்னாடில இருந்து... சரி, நா ஓட்டுறது இருக்கட்டும், பாரு சுண்டல்ல ஈ. முதல்ல அதை ஓட்டிட்டு, காலி பண்ணு.

உடனே மதி சுண்டலில் மூழ்க. கோவிந்த் கடலின் அழகில் மூழ்க, மீண்டும் சிறிது நேரம் தியான  அமைதி நிலவியது. மதி சுண்டல் சாப்பிட்டு முடித்து, அந்த பேப்பரை கசக்கி, ரொம்ப சிரமப்பட்டு கடலை நோக்கி வீச, அது எதிர்காற்றில் அவர்கள் பக்கத்திலேயே வந்து விழுந்தது. கோவிந்த் திரும்பி மதியை முறைத்து பார்த்தார். மதி பாட்டிலை திறந்து தண்ணீர் குடித்தார்.  

கோவிந்த் பையில் இருந்து சானிடைசர் (SANITIZER) எடுத்து கொடுக்க, பெருமாள் தீர்த்தம் போல பவ்வியமாக, மதி அதை தன் கைகளில் வாங்கி நன்றாக தடவிக் கொண்டார். இருவரும் அந்தி மாலை வேளையின் அழகிய கடல் அலையை தொடர்ந்து ரசிக்கிறார்கள். நாமும் தொடர்ந்து ரசிப்போம். பகிர்வோம். நன்றி!

-N. வெங்கடேசன்

எனது யூடியூப் வீடியோக்களையும் பார்த்து மகிழுங்கள்!