சந்தோஷமாக
வாழ யாருக்குத்தான் ஆசை இருக்காது? மனித வாழ்க்கையின் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும்
ஆதாரம் மற்றும் இறுதி நோக்கமாய் இருப்பது மகிழ்ச்சிதான். மகிழ்ச்சியில் புதிதென்றோ,
பழையதென்றோ ஒன்றுமில்லை. மகிழ்ச்சி என்றால் ஒரே மகிழ்ச்சிதான். அது மிகவும் சிரமப்பட்டு, போராடி அடைய வேண்டிய, அல்லது தொலைந்துவிட்ட, தேட வேண்டிய பொருளும் அல்ல.
![]() |
| (Drawings by Venkatesan.N) |
மகிழ்ச்சி
எப்போதுமே, நம் மனதிற்குள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கடவுள்போல. நாம்தான் அதன்
மீது கவனம் செலுத்துவதை விடுத்து, வேறு எதைப் பற்றியெல்லாமோ சிந்தித்துக்கொண்டும்,
விவாதித்துக் கொண்டும், கவலைப்பட்டுக் கொண்டு திரிகிறோம்.
சரி.
எந்த சூழ்நிலையிலும் நம்மை நாம் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள இதோ ஆறு குறிப்புகள்…!
1. தன்னை நேசித்தல் (Self love)
தவறே
செய்யாத அல்லது இழப்பையே சந்திக்காத நபர்கள் என்று உலகில் எவருமே இல்லை எனலாம். ஏன்
கடவுளர்கள் கூட கர்வத்திலோ, கோபத்திலோ தவறிழைத்து பின் வருந்தியதை நம் புராண கதைகளில்
படித்திருக்கிறோம். அப்படி இருக்க, மனிதர்களான நாம் எம்மாத்திரம்…!
”தன்னை
நேசிக்கும் ஒருவர் எந்த சூழ்நிலையிலும், இந்த உலகை நேசிப்பார்”.
![]() |
| (Drawings by Venkatesan.N) |
நாம்
தவறிழைக்கும் பொழுதோ, அல்லது நமக்கு சிலர் தவறு இழைக்கும்போதோ, துரோகங்கள் நடக்கும்பொழுதோ,
அல்லது சில இழப்புகளை சந்திக்கும்போதோ, அவை நம் மனதை பாதிக்கத்தான் செய்யும். ஆனால்,
அதற்காக பல காலம், நாம் நம்மை மிகவும் வருத்திக் கொண்டு, சிரமப்பட வேண்டிய அவசியம்
எதுவும் இல்லை. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மை நேசிக்கிறார்களா என்பதை விடவும்,
நம்மை நாம் நேசிப்பதும், நம் மீது நாம் கருணையோடு இருக்க வேண்டியதும் மிக முக்கியம்.
அப்பொழுதுதான், அடுத்து ஆக வேண்டிய செயல்கள் நோக்கி நம் மனம் திரும்பும்.
கடவுள்
கொடுத்த இந்த உயிரையும், உடலையும் நேசிப்பது, நாம் நம்மை படைத்தவனை நேசிப்பதற்கு ஒப்பானது.
நம்மை
நேசிக்கும் பழக்கம், சமூகத்தில், நம்மைச் சூழ்ந்திருக்கும் அனைவரையும் நேசிக்க வைக்கும்.
மகிழ்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும்.
2. கோபம் தவிர் (Avoid rage)
வாழ்வில்
பெரும் பிரபலங்கள், செல்வந்தர்கள், உயர் பதவி வகிப்பவர்கள் ஆகியோர் மட்டும்தான் என்று
இல்லாமல், அனைத்து தரப்பினரும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்படுவது, இழப்புகளை எதிர்கொள்வது
நடக்கவே செய்கிறது. காரணமானவர்களை உடனடியாக பழி வாங்கியே தீருவேன் என்கிற மூர்க்க குணம்
நம் மகிழ்ச்சிக்கு மாபெரும் முட்டுக்கட்டை.
நன்றாக
பழகியவர்கள் செய்த துரோகம் என்பது மனதை மிகவும் பாதிக்கக்கூடிய ஒன்றுதான். ஆனாலும்,
நாம் அவர்களை மன்னிப்பதுதான் அவர்களுக்கு கொடுக்கும் பெரிய தண்டனை.
உண்மையில்,
கெடுதல் செய்பவர்கள் வெளித்தோற்றத்தில் பெரும் பலசாலிகளாக இருந்தாலும், உள்ளுக்குள்
அவர்களைப் போன்ற மாபெரும் கோழைகள் யாரும் இல்லை என்பதே உண்மையை உணருங்கள்.
அவர்கள்
அவர்களுக்கான கர்ம கணக்குகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதுவே அவர்களை கவனித்துக்கொள்ளும்.
என்றும் எண்ணம் போலத்தான் வாழ்க்கை.
நம்
சந்தோசத்தை குலைக்கும் செயல்களில் இருந்து, எவ்வளவு வேகமாக நம் கவனத்தை திசை திருப்ப
முடிகிறதோ, அந்த அளவுக்கு நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
![]() |
| (Drawings by Venkatesan.N) |
3. செயல்கள் (Actions)
”உலகின்
மிகச் சிறந்த சொல் செயல்” என்பது நாமறிந்ததே. நமது இன்றைய வாழ்க்கை, அது எந்த நிலைமையில்
இருந்தாலும், அதற்கு நேரடியாகவோ, மறைமுகமாவோ முக்கிய தருணங்களில் நாமெடுத்த முடிவுகளும்,
அதை செயல்படுத்தியதுமே காரணமாக இருக்க முடியும்.
நாம்
செய்யும் செயல்களால், நமக்கும் பிறருக்கும் மகிழ்ச்சியே கிடைக்க வேண்டும் என்று முடிவு
செய்து, அதற்கான செயலில் மட்டும் ஈடுபடும்பொழுது, மகிழ்ச்சி கிடைக்காமல் எங்கே போய்விடும்?
குப்பையை
குப்பை தொட்டியில் போடுவது முதல், முதியவருக்கு எழுத, படிக்க, மொபைல் இயக்க, ஏ.டி.எம்.மெஷினில்
பணம் எடுக்க சொல்லித்தருவது என நினைத்துப் பார்க்கும் பொழுதெல்லாம் மகிழ்ச்சி தரும்
எளிய செயல்கள் நம்மைச் சுற்றி ஏராளம்.
நம்மால்
முடிந்த, ஆரோக்கியமான செயல் எதுவாக இருந்தாலும், அதை தொடர்ச்சியாகவும் செயல்படுத்தி
வந்தால், மகிழ்ச்சி எப்போதுமே நம் வாழ்வில் குடிகொள்ளும்.
4. நேர மேலாண்மை (Time management)
வாழ்வின்
நோக்கம் மகிழ்ச்சியே அல்லவா. அதன் அடிப்படையில், 24 மணி நேரத்தில் எத்தனை மணி நேரம்
நாம் மகிழ்ச்சியாக கழித்தோம் என்பதில்தான் மகிழ்ச்சிக்கான சூத்திரமே இருக்கிறது.
நாம்
செய்யும் செயல்களை அதற்கே உண்டான நேரங்களில் அறுதியிட்டு, செய்து முடிக்கும் பொழுது,
செயல்கள் பூர்த்தி ஆவதுடன், நமது பொழுது போக்கு மற்றும் மகிழ்வாக இருப்பதற்கான நேரத்தை
நாம் முழுமையாக அனுபவிக்க முடிகிறது.
எந்தெந்த
எண்ணங்கள், பேச்சுக்கள், செயல்கள், பழக்கங்கள் நமக்கும் நம்மைச் சுற்றி இருப்போருக்கும்
மகிழ்ச்சி தருகின்றனவோ, அவற்றை தொடர்ந்து செய்து வருவதற்கு மட்டுமே நம் நேரத்தை செலவழிக்க
பழக்கிக் கொள்ள வேண்டும். மற்ற எதிர்மறையான, உபயோகமற்ற எண்ணம், செயல், பேச்சுக்களுக்கான
நேரத்தை அறவே தவிர்ப்பது மகிழ்ச்சியை தக்க வைக்கும்.
5. பார்வை-கோணம்
விலை
உயர்ந்த பொருட்களோ, பெயரோ, பதவியோ, பணமோ, சொகுசான வாழ்க்கை இவற்றை எல்லாம் விட, மகிழ்ச்சியாக
இருக்க உண்மையில் தேவையானது என்னவென்றால், மகிழ்ச்சிதான். சொல்லப்பட்ட பொருட்கள் எல்லாம்
சிறிய அளவில் வேண்டுமானால் மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.
![]() |
| (Drawings by Venkatesan.N) |
நம்
நிலையிலேயே நாம் மகிழ்ச்சியாக இருந்து பழக வேண்டும். நமது நட்பு, உறவு வட்டாரத்தில்
யாரெல்லாம் சந்தோஷமாக இருக்கிறார்களோ, அவர்களைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் அவர்களின்
சந்தோஷம் என் மனத்திற்குள்ளும் தொற்றிக் கொள்கிறது என்றால், நமக்கு நாமே ஒரு சபாஷ்
போட்டுக்கொள்ளலாம்! இப்போது, நம்மிடமிருந்து சந்தோஷத்தையும் யாரும் பிரிக்கவே முடியாது.
அதுவே
பிறரின் சந்தோஷத்தைப் பார்த்து பொறாமை கொள்ளும்பொழுது, சந்தோஷம் நம்மை விட்டு வெகு
தூரம் சென்றிருக்கும். மகிழ்ச்சியானவர்களை வாழ்த்தும்போது, நாமும் மகிழ்ச்சியை ஈர்க்கிறோம்.
6. நன்றி உணர்வு (Gratitude)
நிரந்தர மகிழ்ச்சிக்கு நன்றியுணர்வு மிக அவசியம். நமக்கு யாரேனும் தக்க சமயத்தில்
மாபெரும் உதவி செய்தால், அவர்களுக்கு மட்டும்தான் நன்றியோடு இருக்க வேண்டும் என்கிற
கட்டாயமில்லை. சின்னச்சின்ன விஷயங்களை கூட நாம் நன்றியோடு பார்க்கும்பொழுது, மகிழ்ச்சி
நம்மோடே குடி கொள்கிறது.
இன்றைய
வாழ்க்கை நிலைமை எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், நம்மை விட மோசமான நிலைமையில் கைகளில்
உயிரை மட்டுமே பிடித்து வைத்துக்கொண்டு, அடுத்த வேளை உணவும், உயிருமே கேள்விக் குறியாக
இருக்கும் கோடிக்கணக்கான மக்கள், நாம் வாழ்கிற இதே பூமியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்று
இப்போது, இந்த கட்டுரையை படித்துக்கொண்டிருக்கும் அனைவரும் உயிரோடு இருக்கிறோம். இதற்கே
கடவுளுக்கோ, இயற்கைக்கோ, பிரபஞ்ச சக்திக்கோ நன்றி சொல்ல வேண்டாமா?
நம்
மீது கடவுளும் இயற்கையும் காட்டும் கருணை எத்தகையது என்பதை நினைத்து, ஒவ்வொரு நொடியும்
நன்றியோடிருந்தால், மகிழ்ச்சி நம் பாக்கெட்டில்…. இல்லை, இல்லை. நம் நெஞ்சில் நிரந்தரமாகக்
குடியிருக்கும். மகிழ்ந்திருப்போம். நன்றி!
எனது யூடியூப் வீடியோக்களை பார்க்க: 


