சுனாமி, தண்ணீர் பஞ்சம், மூன்றாம் உலகப்போர் வரிசையில் மிரட்டும் கொரோனா.
பொதுவாகவே இயற்கை கோபம் கொண்டால், மனிதர்கள் அதன்
முன்னே சிறு துரும்பாகி சரணடைவதைத் தவிர வேறு எதுவுமே செய்ய முடியாது என்பதே நிதர்சனம்.
ஆனாலும், வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்
நுட்பத்தின் வளர்ச்சியால், தன்னைத் தற்காத்துக் கொள்வதில் மனிதன் கனிசமான அளவில் முன்னேறி
இருக்கிறான் என்று மார்தட்டிக் கொள்வதும் இன்றைய காலகட்டத்தில்தான்.
ஆம், அது ஒரு அழகான வருடக்கடைசி. நாம் எல்லோரையும்
போலத்தான் புதுப்புது கனவுகளோடு புத்தாண்டு கொண்டாடும் கனவோடுதான் சீனாவின் உஹான் நகரில்
அந்த ஒருவரும் இருந்திருக்கிறார். ஆனால், புத்தாண்டு வாழ்த்து சொல்ல முடியாதவாறு காய்ச்சல்,
தொண்டையில் பிரச்சனை, மூச்சுவிடுவதில் சற்று சிரமம் என்று மருத்துவரை அணுகியிருக்கிறார்.
வழக்கம் போல மருந்து மாத்திரைகளுக்கு கட்டுப்படாததால், தொடர்ந்து வேறு சில மருத்துவர்களிடமும்
ஆலோசிக்கிறார்.
அவரை பரிசோதித்த அனைத்து மருத்துவர்களும், அதிர்ந்து
போகிறார்கள். காரணம், அவரை இதுவரையில் இல்லாத அளவிற்கு எதோ ஒரு புதிய வைரஸ் தாக்கியிருப்பதை
கண்டறிகிறார்கள். ஆனால் அது என்ன என்று யாருக்கும் தெரியவில்லை.
இதற்குள் அவருக்கு ஏற்பட்ட அதே அறிகுறிகளோடு, அதே
நகரில் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த பலதரப்பட்ட மனிதர்களும், பல மருத்துவர்களைத்
தேடி வருகிறார்கள். அவர்களைத் தாக்கியிருப்பதும் அதே வைரஸ்தான் என்பது தெரியவருகிறது. இதிலிருந்து இதை தீவிரமாகக் கருதி மருத்துவ ஆராய்ச்சிகள்
தொடங்குகின்றன. மருத்துவத்துறை அதன் தூசு படிந்த வரலாற்றுப் புத்தகத்தைப் புரட்டிப்
பார்க்க ஆரம்பிக்கிறது.
அடுத்த சில நாட்களாக தொடர்ந்து மருத்துவத்துறை பரபபரப்பாக
செயல்பட்ட ஆரம்பிக்கிறது. அதன் கண்டுபிடிப்பு, “கொரோனா வைரஸ் என்பது ஏற்கெனவே மக்களைத் தாக்கிய ஒரு வைரஸ் குடும்பத்தைச்
சார்ந்ததுதான். இந்த குடும்பத்தைச் சார்ந்து 6 வகையான வைரஸ்கள் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது அதன் தொடர்ச்சியான 7-வது வகை வைரஸ். இதுவும் உயிரைக் கொல்லும் வகையில் விபரீத ஆற்றல்
கொண்டது…” என்று மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் கண்டறிகின்றன.
ஒரு
சிறு ஃப்ளாஷ்பேக்
வருடம்: 2002. இடம் : சீனா. திடீரென மக்கள் கொத்து கொத்தாக ஒரே விதமான அறிகுறிகளோடும், நோய்த்தாக்கங்களோடும் மருத்துவர்களை அணுகிக் கொண்டும், ஆங்காங்கே இறந்துகொண்டும் இருக்கிறார்கள். ஒருபக்கம் அதிதீவிரமாய் நோய் பல திசையிலும் பரவிக் கொண்டிருக்கிறது. மருத்துவத்துறை திக்குமுக்காடி முழித்துக் கொண்டு, ஆராய்ச்சியில் இறங்குகிறது.
”இப்போதைய தாக்கத்திற்கு காரணம் சார்ஸ் SARS- CoV என்னும் வைரஸ் தொற்றுதான். இது பெரும்பாலும் வெளவால் மற்றும் சிவெட் வகை காட்டுப்பூனையிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கக்கூடும்” என்றும் மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடுகிறது.
பின்குறிப்பு: சார்ஸ் வைரஸ் தொற்றுக்கு பலியான மக்களின்
எண்ணிக்கை 744.
வருடம் 2012 : இடம் சௌதி அரேபியா
திடீரென
ஒரே மாதிரியான அறிகுறிகளோடு, அதே போன்று மக்கள் ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக பல்வேறு
மருத்துவர்களை அணுகுகிறார்கள். மருத்துவர்கள் சுதாரித்துக் கொள்ள, மருத்துவத்துறை ஆராய்ச்சியில்
குதிக்கிறது.
”இப்போது
மக்களை தாக்கி வரும் வைரஸின் பெயர் MERS-CoV கொரனா. இதுவும் கொரோனா வைரஸ் குடும்பத்தைச்
சார்ந்ததுதான். குதிரை மற்றும் டிரோமெடரி ஒட்டகங்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும்
வாய்ப்புகள் அதிகம்” என்று மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளில் அறிவிக்கப்பட்டது. ஆம்,
அது கேமல் ஃப்ளூ என்றும் அழைக்கப்பட்டது.
பின்குறிப்பு: மெர்ஸ் வைரஸ் தொற்றால் பலியான மக்களின்
எண்ணிக்கை 800
வருடம் 2019: இடம் சீனா (உஹான்)
திடீர் நோய்த்தொற்று, ஒரே நேரத்தில் பலருக்கு ஏற்படுவது, நோயின் தீவிரத்தில் பலர் இறந்து கொண்டிருப்பது போன்றவற்றால் விழித்துக் கொண்ட மருத்துவத்துறை ஆராய்ச்சியின் இறங்குகிறது. ”2019- nCoV (new strain of coronavirus)” என்கிற கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்தான் இதுவும் என்று முடிவாக அறிவிக்கப்படுகிறது.
இந்த பெயரில் 2019 என்பது வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட வருடத்தையும், n என்பது புதியது என்பதையும் CoV என்பது கொரனாவையும் குறிக்கும். புதியது என்பதால் ”நாவல் கொரோனா வைரஸ்” என்றும் இது அழைக்கப்படுகிறது.
அதன் பிறகு, சீனாவின் தேசிய சுகாதார நிறுவனமும் கொரோனாவை உறுதி செய்ததோடு, மக்களிடம் அது குறித்த விழிப்புணர்வையும் தீவிரமாக ஏற்படுத்த ஆரம்பித்தது.
இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக தாமதிக்கமால் மருத்துவரை அணுகவும் வலியுறுத்தியது. அதன் பின்னர், சீனாவின் வுகான் மாநிலத்தில் ஆரம்பித்த கோரோனா, பிற 13 மாவட்டங்களிலும் பரவிற்று.
சிகிச்சை:
இந்த வைரசுக்காகன தடுப்பு மருந்துகளைக் கண்டறிய
ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தாலும், இன்றுவரை தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படும்போது, மருத்துவத்துறையும்
மக்களும் பயத்தில் உரைகிறார்கள்.
நாவல்
கொரோனா வைரஸை குணப்படுத்துவது அல்லது கட்டுக்குள் வைப்பது என்பது இதுவரை தாக்கிய வைரஸ்கள்
போன்று அதற்கான மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு, தக்க மருந்து மற்றும் தடுப்புகள்
கண்டுபிடிக்கப்பட்டு, அகற்றப்படுவது என்பது வழக்கமானதுதான் என்று சொல்லப்பட்டாலும்,
அதற்கான மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்குள் ஆயிரக்கணக்கான
உயிர்களைக் காவு கொடுத்தாக வேண்டி இருக்கிறது.
ஆனால்,
எந்த ஒரு நாட்டில் கொடிய நோய்த்தாக்கம் ஏற்பட்டாலும், உலகத்தின் பிற நாடுகள் ஒன்று சேர்ந்து நோயைக் கட்டுக்குள்
வைக்கவும், அதற்கான தீர்வுகளை எட்டவும் உடனடியாக களத்தில் இறங்குகின்றன.
- கொரோனா தொடர்பான மற்ற அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். தொடர்ந்து மருத்துவ
கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும்.
- உலக
சுகாதார அமைப்பின் பரிந்துரைகள்: நோய் தொற்று ஏற்பட்டவர்களின் மருத்துவ விவரங்களை உலக சுகாதார நிறுவனத்திற்கு
தெரியப்படுத்த வேண்டும்.
- கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக, தீவிர தற்காப்பு நடவடிக்கைகளில்
ஈடுபட வேண்டும்.
- சுத்தமாக,
சுகாதாரமாக இருந்தாலே போதுமானது.
இதுவரை
கண்டுபிடிக்கப்பட்ட காரணம்:
கிட்டத்தட்ட
1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மத்திய சீனாவில் உள்ள உஹான் நகரில்தான் நாவல்
கொரோனா தொற்று துவங்கியது என்பதால் அந்த இடத்தை பல்வேறு கோணங்களில் மருத்துவத் துறையினர்
அலசி ஆராய்ந்ததனனர். அதன் விளைவாக, அந்த பகுதியில் இருக்கும் பிரபலமான இறைச்சி மற்றும் கடல் உணவுகளை விற்கும் சந்தை மூலகாரணமாக
இருக்கக்கூடும் என்று கருதுகிறார்கள்.
சீனர்கள்
பல வகையான இறைச்சி, கடல் வாழ் உணவுகள் என பல அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவதும் நாமறிந்ததே. விலங்குகளை
வெட்டி விற்கும் சந்தையில் இருந்து, அதாவது, விலங்குகளிடைருந்து மனிதர்களுக்கு இந்த
நாவல் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பரவியது எனலாம்.
அறிகுறி
/ பாதிப்புகள்:
இந்த
வைரஸ் நுரையீரலை தாக்கி நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்துகிறது. சீனாவின் தேசிய சுகாதார
மருத்துவம் தெரிவித்துள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகள்:
- காய்ச்சல்
- இருமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கும்.
- மூச்சு விடுவதில் பிரச்சனை, மூச்சு திணறல்.
நோய்
தொற்றும் தன்மை:
விலங்குகளிடமிருந்து
விலங்குகளுக்கு பரவிய கொரனா வைரஸ் எப்போது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவியதோ
அப்போதே மனிதனிடமிருந்து மனிதனுக்கும் இந்த வைரஸ் தொற்றிவிடும் அபாயம் உண்டு. இதை சீனாவின்
தேசிய சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. அதே போன்று உலக சுகாதார நிறுவனமும்
(WHO) மனிதனுக்கு மனிதன் இந்த கொரனா வைரஸ் தொற்று பரவுகிறது என்று உறுதி செய்துள்ளது.
- கொரோனா
வரைஸ் காற்றில் பரவக்கூடியது, இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும்
பொழுது, தும்மும் பொழுது, சளியை துப்பும் பொழுது, இந்தக் கிருமிகள் காற்றில் கலந்து,
அந்த காற்றை சுவாசிப்பவர்களையும் தொற்றும் அபாயம் மிக அதிகம்.இந்த
நாவல் கொரோனா வைரஸ் மனிதர்கள் மட்டுமின்றி பறவைகள், விலங்குகள் என அனைத்தையும் தாக்கக்
குடியது
- மருத்துவர்கள்,
சிகிச்சை அளிப்பவர்களுக்கும் தொற்றக் கூடும்.
- கண்டம்
விட்டு கண்டம் தாவும்.
வைரசும் உயிர் இழப்பு சதவீதமும்:
- 2002-ல் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இதே கொரோனா வகை வைரஸான SARS, பன்றி, வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவியதில் 10% உயிர் இழப்பு விகிதம் என கணக்கிடப்பட்டது.
- 2014 – மர்ஸ், Middle East Resiparatory Syndrome! சவுதி அரேபியாவில் தொடங்கியதில் பாதிக்கப்பட்டவகளில் 37%, இறப்பதற்கான வாய்ப்பு இருப்ப்தாக தெரிவிக்கப்பட்டது.
- 2018-ல் கேரளாவில் நிபா வைரஸ் பலமாக தாக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தியதும் குறிப்பிடத் தக்கது.
கொரோனா
வைரஸுக்கான சிகிச்சை & மருந்து:
இந்த
வைரஸ் தாக்கத்தினை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், அதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், அதற்கு
தடுப்பு மருந்துகள் இருக்கின்றன என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
தாய்லாந்து
மருத்துவர்கள் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பில் முதல் கட்டமாக வெற்றி
பெற்றிருப்பதாக வரும் செய்திகள் சற்று நம்பிக்கையை அளிக்கின்றன.
முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள்:
- பொதுமக்கள் அதிகம் பேர் கூடும் இடங்களில் செல்வதை தவிர்க்கவும்.
- வெளியில் செல்லும்பொழுது, அவசியம் இருந்தால், முகமூடி அணிந்து செல்லவும்.
- உங்களுக்கு ஏதேனும் அறிகுறி தென்பட்டால், உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
- கைகளை சோப்பு போட்டு அலம்பும் பொழுது வழக்கத்தை சில கூடுதல் நொடிகளுக்கு தேய்த்து அலம்பவும்.
- கைகளை முகத்தில் வைத்து துடைப்பதோ, மூக்கில் தேய்ப்பதோ, சுவாசிப்பதோ வேண்டாம்.
- தும்மல் வந்தால், மூக்கை மூடி தும்மவும்.
- ஆரஞ்சு பழம், நெல்லிக்காய், லெமன், விட்டமின் சி, கொய்யா, நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் உணவுகளை உட்கொள்ளவும்.
அரசு
நடவடிக்கைகள்:
- உலகின் பல்வேறு நாடுகளும் நோய்த் தொற்று மற்றும் இறப்பின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு, தங்கள் நாடுகளைச் சேர்ந்தவர்களை சீனாவிலிருந்து பாதுகாப்பாக தங்கள் நாட்டிற்கு கொண்டு வரும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன.
- சீனா, உஹான் உள்ளிட்ட பல நகரங்களை அரசாங்கம் லாக் செய்து வைத்திருக்கிறது.
- 31-1-2020: கடந்த இரண்டு மாதங்களில் இந்த வைரஸ் அதிதீவிரமாக பரவி வருவதால் உலக சுகாதார அமைப்பு இதனை ஓர் அவசர நிலையாக அறிவித்திருக்கிறது.
- அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தாய்வான் போன்ற நாடுகள் சீனாவிலிருந்து வருபவர்களுக்கு தடை விதித்திருப்பதுடன், விமான போக்குவரத்தையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
- மேலும் தவிர்க்க முடியாத காரணங்களால் சென்று வருபவர்கள் பல்வேறு தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
- கத்தாரும் சீனாவிற்கான விமான சேவையை நிறுத்தியுள்ளது.
உலகெங்கும் உள்ள கோவில்கள், சர்ச்கள், மாஸ்க் என அனைத்து மதக் கோவில்களிலும், பல லட்சக் கணக்கான மதத் தலைவர்களும், பொதுமக்களும் கூட்டு பிரார்த்தனை, சிறப்பு பிராத்தனை, பூஜைகள், வழிபாடுகள் என பல்வேறு முறைகளில், இந்த நோய்த் தொற்றின் தீவிரத்தைத் தணிக்கும் வகையில் ஆன்மீக அதிர்வுகளை பரப்பி வருகிறார்கள் என்பதும் மிக முக்கியமான விஷயம்.
புத்த மதத் தலைவர் தலாய்லாமா அவர்கள், ”ஓம் தாரே தாத்தாரே சுரே சோஹா” (Om tare tuttare ture Soha) என்ற மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வந்தால், கொரோனா வைரஸ் பரவாது என்று, அவரது பங்களிப்பினைச் செய்திருக்கிறார்கள்.
முடிவான தொடக்கமாக:
உன்னை
விட பல மடங்கு நாங்கள் சக்தி வாய்ந்தவர்கள் நாங்கள், எங்கள் மீது கை வைக்காதீர்கள்,
எங்களுக்கு முரணாக எதுவும் செய்யாதீர்கள்! என்று நெற்றிப் பொட்டில் அடித்து சொல்வது
போல, அந்த இயற்கையும் அவ்வபோது தனது அசுர பலத்தினை கோபமாக நினைவூட்டிய வண்ணம்தான் இருக்கிறது.
இயற்கையின் கோர தாண்டவம் எதுவாகினும், அதன் பாதிப்புகள் எவ்வளவாகினும், மனிதர்களான
நம்மால் சொல்ல முடிந்தது, “எல்லாம் ஒரு அனுபவம்தான். ஏதோ நமக்கு தெரிந்த வரையில், நம்மால்
முடிந்த வரையில், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றை வைத்துக்கொண்டு, அதேநேரம் அறிவுறுத்தப்படுபவற்றை
முறையாக பின்பற்றியும் வருவோம்; வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்ப்போம்; அமைதி மற்றும் நேர்மறை அதிர்வுகளை உலகில் பரப்புவோம்” என்பதைத் தவிர வேறொன்றுமே
இல்லை. நன்றி!