என் நெஞ்சில் குடியிருக்கும் மகிழ்ச்சிக்கு நன்றி!
மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்கிற ஆர்வத்தில் இந்த கட்டுரையை படிக்க முடிவெடுத்ததற்கு நன்றி. இதிலுள்ள ஏதாவது ஒரு விஷயம் உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வகையில் சந்தோஷம் கொடுத்தால், அல்லது கொடுத்துக் கொண்டிருந்தால் மிக்க மகிழ்ச்சி.
மகிழ்ச்சியில்
புதிதென்றோ, பழையதென்றோ ஒன்றுமில்லை. மகிழ்ச்சி என்றால் ஒரே மகிழ்ச்சிதான். அதுமட்டுமல்ல,
மகிழ்ச்சி என்பது புதிதான ஒன்று, மிகவும் சிரமப்பட்டோ, போராடியோ தேடிப்பெற வேண்டியது,
அல்லது எங்கோ தொலைத்துவிட்டோம், இழந்துவிட்டோம் என்றோ நினைக்கிறீர்களா…? I am very
sorry. அப்படி எல்லாம் எதுவும் இல்லை மக்களே!
மகிழ்ச்சி எப்போதுமே, நம் மனதிற்குள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கடவுள் போல. நாம் தான் அதன் மீது கவனம் செலுத்துவதை விடுத்து, வேறு எதைப் பற்றியெல்லாமோ சிந்தித்துக் கொண்டும், விவாதித்துக் கொண்டும், இருக்கிறோம்.
சரி. சாரி. இதோ சந்தோஷத்திற்கான டிப்ஸ்…!
1. தன்னை நேசித்தல் (Self love):
தவறே செய்யாத அல்லது இழப்பையே சந்திக்காத நபர்கள் என்று உலகில் எவருமே இல்லை எனலாம். ஏன் கடவுளர்கள் கூட கர்வத்திலோ, கோபத்திலோ தவறிழைத்து பின் வருந்தியதை நம் புராண கதைகளில் படித்திருக்கிறோமல்லவா?! எதுவுமே முயற்சிக்காதவர்கள் தவறு செய்வதில்லை. வாஸ்தவம் தான். ஆனால், அதுவே ஒரு தவறு என்பதை அவர்கள் உணர்வதில்லை. அப்படி இருக்க, மனிதர்களான நாம் எம்மாத்திரம்…!
”தன்னை நேசிக்கும் ஒருவர் எந்த சூழ்நிலையிலும், இந்த உலகை நேசிப்பார்” என்று பெரியோர்கள் கூறக் கேட்டிருப்போம்.
நாம் தவறிழைக்கும் பொழுதோ, அல்லது நமக்கு சிலர் தவறு இழைக்கும்போதோ, துரோகங்கள் நடக்கும்பொழுதோ, அல்லது சில இழப்புகளை சந்திக்கும்போதோ, அவை நம் மனதை பாதிக்கத்தான் செய்யும். ஆனால், அதற்காக பல காலம், நாம் நம்மை மிகவும் வருத்திக் கொண்டு, சிரமப்பட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. நம் மீது நாம் கருணையோடு இருக்க வேண்டியது மிக முக்கியம். நம் உயிருக்கு அடுத்ததுதான் மற்ற எதுவுமே.
கடவுள்
கொடுத்த இந்த உயிரையும், உடலையும் நேசிப்பது, நாம் நம்மை படைத்தவனை நேசிப்பதற்கு ஒப்பானது. நம்மை
நேசிக்கும் பழக்கம், சமூகத்தில், நம்மைச் சூழ்ந்திருக்கும் அனைவரையும் நேசிக்க வைக்கும்.
மகிழ்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும்.
2. ஆத்திரம் தவிர் (Avoid rage)
:
வாழ்வில் பெரும் பிரபலங்கள், செல்வந்தர்கள், உயர் பதவி வகிப்பவர்கள் ஆகியோர் மட்டும்தான் என்று இல்லாமல், அனைத்து தரப்பினரும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்படுவது, இழப்புகளை எதிர்கொள்வது நடக்கவே செய்கிறது. அதற்காக, அதற்கு காரணமானவர்களை உடனடியாக பழி வாங்கியே தீருவேன் என்கிற மூர்க்க குணமானது, நம் மகிழ்ச்சிக்கு மாபெரும் தடை.
பிறரின் துரோகம் தாங்கிக் கொள்ள முடியாமல் போவது இயல்புதான். அப்படி செய்தவர்களை மன்னித்து விட்டுவிடுவதா? என்று கேட்டால், சரி, நம்மால் அவர்களை வேறு என்ன செய்து விட முடியும்? என்று பார்த்தால், உண்மை விளங்கும். கெடுதல் செய்பவர்கள் வெளித்தோற்றத்தில் பெரும் பலசாலிகளாக இருந்தாலும், உள்ளுக்குள் அவர்களைப் போன்ற மாபெரும் கோழைகள் யாரும் இல்லை என்பதே நிதர்சனம்.
அவர்கள் அவர்களுக்கான கர்ம கணக்குகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். (பல நாள் திருடன்...)
நம்
சந்தோசத்தை குலைக்கும் செயல்களில் இருந்து, எவ்வளவு வேகமாக நம் கவனத்தை திசை திருப்ப
முடிகிறதோ, அந்த அளவுக்கு நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
3. செயல்கள் (Actions):
”உலகின் மிகச் சிறந்த சொல் செயல்” என்பது நாமறிந்ததே. நமது இன்றைய வாழ்க்கை, அது எந்த நிலைமையில் இருந்தாலும், அதற்கு நேரடியாகவோ, மறைமுகமாவோ முக்கிய தருணங்களில் நாமெடுத்த முடிவுகளும், அதை செயல்படுத்தியதுமே காரணமாக இருக்க முடியும்.
எல்.கே.ஜி. படிக்கும் மாணவர் முதல், மாவட்ட நிர்வாகி, வியாபாரி, விவசாயி, நாட்டின் பிரதமர், முதலமைச்சர், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் என எத்துரையில் முக்கிய பொறுப்பில் வகிப்பவர்களாயினும், அவர்கள் அவர்கள் செய்யும் செயல்களை வைத்தே வகைப்படுத்தப்படுகிறார்கள். சிறப்பினைப் பெறுகிறார்கள்.
குறைந்தபட்சம், ஒரு நாளின் ஒரு அங்குலம் அளவாவது நமது இலக்குகளை நோக்கியோ, அல்லது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நமக்கு எது உதவி செய்யுமோ அதை நோக்கி செயல்படுவதே மகிழ்ச்சிக்கு உத்தரவாதம்.
நம்மால் முடிந்த, ஆரோக்கியமான விஷயம் எதுவாக இருந்தாலும், அதை உடனடியாகவும் தொடர்ச்சியாகவும் செயல்படுத்தி வந்தால், மகிழ்ச்சி எப்போதுமே நம் வாழ்வில் குடிகொள்ளும்.
4. நேர மேலாண்மை (Time management):
வாழ்வின் நோக்கம் மகிழ்ச்சியே அல்லவா. ஆம்! அதன் அடிப்படையில், அனைத்து தரப்பட்டவருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரமே. அதில் எத்தனை மணி நேரம் நாம் மகிழ்ச்சியாக கழித்தோம் என்பதில்தான் மகிழ்ச்சிக்கான சூத்திரமே இருக்கிறது.
நாம் செய்யும் செயல்களை அதற்கே உண்டான நேரங்களில் அறுதியிட்டு, (சில தவிர்க்க முடியாத காரணங்கள் தவிர) செய்து முடிக்கும் பொழுது, செயல்கள் பூர்த்தி ஆவதுடன், நமது பொழுது போக்கு மற்றும் மகிழ்வாக இருப்பதற்கான நேரத்தை நாம் முழுமையாக அனுபவிக்க முடிகிறது.
எந்தெந்த எண்ணங்கள், பேச்சுக்கள், செயல்கள், பழக்கங்கள் நமக்கும் நம்மைச் சுற்றி இருப்போருக்கும் மகிழ்ச்சி தருகின்றனவோ, அவற்றை தொடர்ந்து செய்து வருவதும், மற்ற எதிர்மறையான, உபயோகமற்ற எண்ணம், செயல், பேச்சுக்களை தவிர்ப்பதும், பொன் போன்ற நேரமானது மிச்சப்படுத்த வழி செய்யும்.
மகிழ்ச்சியான நேரங்களை மகிழ்ச்சியாக செலவிடுவதுடன் மட்டுமல்லாமல், நாம் செய்யும் செயல்களையும் மகிழ்ச்சியோடு செய்யும் மனோபாவத்தால், மகிழ்ச்சி எப்போதும் நம் பாக்கெட்டுகளிலேயே இருக்கும்.
5. மகிழ்ச்சியானவர்களை வாழ்த்துவோம் (Let’s bless Happy people):
ஒரு சுய சோதனை கேள்வி.
உங்கள் நட்பு, உறவு வட்டாரத்தில் சந்தோஷமாக இருப்பவர்களைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் மனத்தில் முதலில் என்ன தோன்றுகிறது...?
பிரபஞ்ச விதிப்படி, அடுத்தவர்கள் சந்தோஷத்தைப் பார்த்து பொறாமை கொள்ளும்பொழுது, துக்கத்தையுமே ஈர்க்கிறோம்.
சந்தோஷமானவர்களைப் பற்றி நினைக்கும் பொழுது அவர்களின் சந்தோஷம் என் மனத்திற்குள்ளும் தொற்றிக் கொண்டால், சபாஷ்! சந்தோஷமானவர்களை வாழ்த்தும்போது, நாமும் சந்தோஷத்தை ஈர்க்கிறோம்.
6. நன்றி உணர்வு (Gratitude):
சந்தோஷமான வாழ்க்கைக்கு இறுதியான, ஆனால் முக்கியமான ஒரு விஷயம் நன்றியுணர்வு.
நன்றி உணர்வோடு இருப்பதற்கு நமக்கு யாரேனும் மாபெரும் உதவி செய்திருக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. இன்று இப்போது, இந்த கட்டுரையை படித்துக்கொண்டிருக்கும் அனைவரும் உயிரோடு இருக்கிறோம். (இந்த நேரத்தில் பலர் இறந்து கொண்டிருக்கிறார்கள். இறந்திருக்கிறார்கள்) இதற்கே கடவுளுக்கோ, இயற்கைக்கோ, பிரபஞ்ச சக்திக்கோ நன்றி சொல்ல வேண்டாமா?
இன்றைய வாழ்க்கை நிலைமை எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்! நம்மை விட மோசமான நிலைமையில் கைகளில் உயிரை மட்டுமே பிடித்து வைத்துக்கொண்டு,(வறுமை கோட்டுக்கு கீழே இருக்கும் நாடுகள், போர் காலங்கள், இயற்கை சீற்றத்தால் உருக்குலையும் நகரங்கள்...) அடுத்த வேளை உணவும், உயிருமே கேள்விக் குறியாக இருக்கும் பல கோடிக்கணக்கான மக்கள் நாம் வாழ்கிற இதே பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நம் மீது கடவுள் காட்டும் கருணை எத்தகையது என்பதை நினைத்து, அவருக்கு ஒவ்வொரு நொடியும் நன்றியோடிருந்தால், மகிழ்ச்சி நம் பாக்கெட்டில்…. இல்லை, இல்லை. அதனடியில் இருக்கும் நம் நெஞ்சில் நிரந்தரமாகக் குடியிருக்கும். உங்கள் சந்தோஷக் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்! மகிழ்ந்திருப்போம். அதிர்வுகளில் இணைந்திருப்போம். நன்றி!
