இன்றைய கேட்ஜெட் மயமான யுகத்தில் எழுதுவது
என்பது எழுத்தாளரின் வேலை என்று நினைத்து எவரும் அவ்வளவு சுலபமாக அதனை ஒதுக்கிவிட இயலாது.
பள்ளி நாட்களில், கையெழுத்து நன்றாக இருக்க
வேண்டும் என்பதற்காக தமிழ் என்றால் இரு வரி நோட்டுகளிலும், ஆங்கிலம் என்றால் நான்கு
வரி நோட்டுகளிலும் எழுதி பழகியது ஓர் அலாதியான
அனுபவம். கையெழுத்து நன்றாக இருந்தால் தேர்வில் அதற்கே கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்கும்
என்ற ஒரு சிறு ஆசையும் இதன் பின்னணி காரணங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம். அதுபோக,
கையெழுத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருப்போம். இப்படி எழுதுவதின் மீது இந்த சிஸ்டம்
நமக்கு காட்டிய கோணம் மிகக்குறுகியதாக இருந்தாலும், அந்தந்த வயதுகளில் இவை முக்கிய
நிகழ்வுகளே.
பள்ளி படிப்பையோ, அல்லது இரண்டுவரி, நான்கு
வரி நோட்டு பயிற்சியையோ நிறுத்திய பின்னர், நாம் எழுதும் அனைத்திலும், இல்லாத கோடுகளை
இருப்பதாக பாவித்து, அதே அழகு மற்றும் நேர்த்தியோடு எழுதுகிறோமா என்பதை நமக்கு நாமேதான்
கேட்டுக்கொள்ள வேண்டும். கையெழுத்து பயிற்சியைத் தவிர்த்த நண்பர்கள்,
“கையெழுத்து நல்லா இருந்தா, தலையெழுத்து நல்லா இருக்காது மாப்ளே” என்று தங்களின் சோம்பேறித்தனத்தை
நகைச்சுவையாய் வெளிப்படுத்தியதும், அவ்வபோது நம் மனதில் திகில் கிளப்பகூடச் செய்திருக்கலாம்.
படிப்பு சுட்டுப் போட்டாலும் வரவே வராது.
ஆனாலும், அவன் கையெழுத்து மணி மணியாக, முத்து முத்தாக, கண்ணில் ஒற்றிக் கொள்வது போல
இருக்கும் என்பதாலேயே, ஒரு மாணவனை 9-ஆம் வகுப்பு வரை எவ்வளவோ அறிவுரைகள் சொல்லி ஆசிரியர்கள்
தேர்ச்சியடைய வைத்தார்கள். 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற இயலாத அந்த மாணவன், இப்போது
ஒரு சிறந்த சுவர் ஓவியராக, வலம் வருகிறார் என்பதும், குறிப்பிடத்தக்க எழுத்தின் தாக்கமே.
எழுத்தே தலையெழுத்து!
பெரும்பாலும், படிப்பதை விட, ஒன்றை எழுதும்பொழுது,
அதிக கவனம் அந்த பாடத்தின் மீது இருப்பதால், அவை எளிதாக மனதில் பதியும் என்பதே வீட்டுப்
பாடங்கள் மற்றும் Imposition-களின் பின்னணியில் உள்ள அறிவியல் பூர்வமான காரணம். இத்தகைய
வீட்டுப்பாடங்களையும், அரட்டை அடித்துக்கொண்டோ, டிவி பார்த்துக் கொண்டோ, பாட்டு கேட்டுக்
கொண்டோ கடனே என்று எழுதும் அதிமேதாவிகளும் உண்டு. ஹஹா…!
பள்ளிப்பாடங்கள், மதிப்பெண்கள் என்பதை எல்லாம்
கடந்து, சுயமாக கட்டுரைகள், கதைகள், கவிதைகள் என்று எழுதும் ஆற்றல் ஒரு சிலரை இழுத்துச்
சென்று, பின்னாளில் அவர்கள் பத்திரிக்கை, நாளிதழ் உள்ளிட்ட எழுத்து துறைகளில் பணியாற்றுவதையும்,
எழுத்தாளர்களாகி அரிய படைப்புகளை எழுதுவதையும் கூட நாம் பார்க்கிறோம்.
அவற்றை வண்ணவண்ண வார்த்தைகள் கோத்து, விளம்பரப்படுத்தி, அவர்களின் படைப்புகளை வாசகர்களிடம்
கொண்டு சேர்ப்பதும் எழுத்தே, எழுத்தாளர்களே! படைப்புகளைப் பாராட்டி விமர்சனம் எழுதுகிறவர்களும்
எழுத்தாளர்களே.
தொழில்நுட்ப படிப்போ, உயர் படிப்போ படித்திருந்தாலும்,
சிறப்பாக சுயவிவரம் எழுதியிருந்தால் மட்டுமே, அதற்கான வேலைகளில் இன்று நுழைய முடிகிறது
என்பது நிதர்சனம். இதற்கென CV Builders, அதாவது பணம் பெற்றுக்கொண்டு, நமது சுயவிவரம்
எழுதிக்கொண்டுக்கும் ஆன்லைன் கம்பெனிகள் ஆயிரம் ஆயிரம் விரவியிருப்பதையும் நாம் அறிவோம்.
விற்பனைப்பிரிவில் அனுபவம் வாய்ந்தவராக இருந்தாலும்,
ஒரு பொருளையோ, அல்லது சேவையையோ விற்பதற்கு முன்பாக, சம்மந்தப்பட்டவர்களிடம் முன்னதாக
அது குறித்த விவரங்களை, மின்னஞ்சல் மூலம் தெளிவாக, கவர்ந்திழுக்கும்படி எழுதி அனுப்ப
வேண்டி இருக்கிறது. அதற்கும் எழுதுத்திறமையே அவசியமாகிறது.
தயாரிக்கப்படும் பொருள் அல்லது சேவையை விளம்பரப்படுத்தவும்
ஸ்லோகன் போன்ற கவர்ச்சிகரமான வாசகங்களை உருவாக்குவதும் எழுத்தே!
பொருட்களை வாங்கி நுகரும் நுகர்வோரும், அந்த
பொருள் பற்றிய விருப்பு, வெறுப்புகளை பகிர்ந்துகொள்ளும் Feedback-ம் இன்றய வியாபாரப்
போட்டிகள் நிறைந்த உலகில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தச் செய்யும் எழுத்துக்கள்தான்.
இவை போக, இன்று நம் நேரத்தின் பெரும்பங்கினை
Granted-ஆக எடுத்துக் கொள்ளும், கைப்பேசியிலும், Twitter, FaceBook, Blog,
YouTube, என எங்கும் எதிலும் புகைப்படம் மற்றும் வீடியோக்களாக இருந்தாலும், அவற்றின்
மூலம் எழுத்துக்களே!
இன்றைய அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சியில்,
எந்த நாட்டில் இருந்து வேண்டுமானாலும், எந்த நாட்டில் உள்ளவர்களுக்காகவும் பணியாற்ற
கூடிய சூழலில், பணியாளர்களைப் பற்றி முதலாளிகளும், முதலாளிகள் அல்லது நிறுவனம் பற்றி
பணியாளர்களும் உட்கார்ந்த இடத்திலிருந்தே அறிந்து கொள்ள உதவுவதும் LinkedIn போன்ற தொழில்முறை
சமூக வலைதளங்களே. அவற்றின் ஆதாரமும், பலமும் எழுத்தே!
முன்னர் சுவரொட்டிகளாகவும், துண்டு பிரசுரங்களாகவும்
இருந்த விளம்பர எழுத்துத்தொழில்கள் இன்றும் டிஜிட்டல் வடிவத்தில் மாறி அபரிமிதமாக வளர்ச்சி
பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதன் மூலமும் எழுத்தே!
இன்றைய அதிவேக உலகில், வியாபார நோக்கில் விவரங்கள் மிகைப்படுத்திக் சொல்லப்பட்டாலும், உண்மைகள் சில மறைக்கப்பட்டாலும், திரிக்கப்பட்டாலும், பல்வேறு வடிவங்களில் நம்மை சூழ்ந்திருக்கும் எழுத்துக்கள் நம் ஆழ் மனத்திலும், அதன் மூலமாக, நம் சிந்தனை முறை, வாழ்க்கை முறையிலும் ஏராளமான தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
இன்றைய அதிவேக உலகில், வியாபார நோக்கில் விவரங்கள் மிகைப்படுத்திக் சொல்லப்பட்டாலும், உண்மைகள் சில மறைக்கப்பட்டாலும், திரிக்கப்பட்டாலும், பல்வேறு வடிவங்களில் நம்மை சூழ்ந்திருக்கும் எழுத்துக்கள் நம் ஆழ் மனத்திலும், அதன் மூலமாக, நம் சிந்தனை முறை, வாழ்க்கை முறையிலும் ஏராளமான தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
ஆகவே, எழுதுக்களை வாசித்து பழகுவதன் மூலமாக,
எழுதிப் பழகுவதின் மூலமாக, பொருளீட்டும் வாழ்க்கைக்கான உத்தரவாதம் என்பதைத் தாண்டி,
எழுத்துக்கள் வாழ்க்கை குறித்த புரிதலையும், தொலை நோக்குப் பார்வையினையும், தெளிவினையும்,
விழிப்புணர்வையும் ஏற்படுத்தவே செய்கின்றன.
வாழ்வின் முக்கிய முடிவுகள் எடுக்கும் தருணங்களில், நம் முன்னேயுள்ள வாய்ப்புகள் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தக்கூடும். அப்போது கூட நடுநிலையோடு, இருவேறு தெரிவுகளின் சாதக, பாதகங்களை பட்டியலிட்டு எழுதிப் பார்க்கையில், எழுத்துக்கள் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்றன.
முன்பு மட்டுமல்ல இன்றும் கூட நீண்ட பயணங்களின்
சமயத்தில் வாசிக்க புத்தகம் கொண்டு செல்வோரும் உளர். உண்மை என்னவென்றால், இன்று கைப்பேசிக்குள்
அனைவரோடும் ஆயிரம் ஆயிரம் புத்தகங்களும் எழுத்துக்களும் கைக்குள்ளேயே எங்கேயும் எப்போதும்
சக பயணியாக தொடர்ந்து பயணப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
இத்தகை முக்கியத்துவம் வாய்ந்த எழுத்துக்களை
நாம் தேர்ந்தெடுத்து வாசிப்போம்! நேசிப்போம்! தொடர்ந்து பகிர்வோம்! அதிர்வுகளில் இணைந்திருப்போம்!
நன்றியுடன்,
-ந.வெங்கடேசன்