சிறுகதையாகவோ, நாவலாகவோ ஒரு கதையை படிக்கும் பொழுது, அந்த எழுத்துக்களானது வாசகர்கள் சிந்தனையைத் தூண்டி, அவர்களது ரசனை மற்றும் கற்பனை வளத்திற்கு தீனி போடுகிறது. ஒவ்வொரு வாசகனும் அவனது சொந்த கற்பனை உலகிற்குள் (Imagination and visualization) சஞ்சரிக்க முடிகிறது.
உதாரணமாக, ஒரு பிரம்மாண்டமான அரங்கம் என்று எழுத்தாளர் எழுதினால், அந்த பிரம்மாண்டம் என்பதை ஒவ்வொரு வாசகரும் அவரவர் ரசனைக்கு ஏற்ப அமைத்துக் கொள்ள முடிகிறது. இது வாசிப்பு உலகத்தின் மிகச் சிறந்த ஒரு அம்சம். வாசிப்பதில் மட்டுமே கிடைக்கும் ஒரு தனி அனுபவமும்கூட.
இதுவே, அதே படைப்பானது காட்சி ஊடகத்தின் (Visual medium) வாயிலாக, காட்சிகளாக காண்பிக்கப்படும் பொழுது, அங்கும் அதே ரசிகர்கள் தான். அதே கதைகள்தான். அதே காட்சிகள் தான். ஆனால் ஒரு சிறு வித்தியாசம். எழுத்துக்கள் காட்சிப்படுத்தப்பட்டு காண்பிக்கப்பட்டு விடுகின்றன. இதனால் ரசிகர்களின் கற்பனை திறனுக்கு இங்கு வேலை இல்லை. வெறுமனே காட்டப்படும் காட்சிகளை பார்க்கும் அளவோடு ரசனை நின்றுவிடுகிறது. இது காட்சி ஊடகத்திற்கே உரித்தான ஒரு அம்சம்.
சிறுகதையாகவோ, நாவலாகவோ படித்த ஒரு கதையானது தொலைக்காட்சி தொடராகவோ, திரைப்படமாகவோ காண்பிக்கப்படும் பொழுது, தயாரிப்பாளர்களின் கோணத்தில் பார்த்தால், ”கதையாகவே இது வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. எனவே இதனை திரைப்படமாக தயாரித்தால், அதே வெற்றி கிடைக்கும்” என்பது அவர்களின் கருத்து.
இதில் பார்ப்பவர்களின், கற்பனைக்கு வேலை இல்லை என்பதால், முடிந்த அளவிற்கு அவர்களே சிறப்பாக காட்சிப்படுத்த முயற்சிக்கிறார்கள். காட்சிகளை பார்ப்பது என்பது அதற்கே உண்டான எல்லைகளை கொண்டிருக்கிறது.
வாசகர்களை பொருத்தவரையில், அவர்கள் படித்து, ரசித்து, அவரவர் ரசனைக்கேற்ப மனத்திரையில் காட்சிகளாக ஏற்கனவே பல முறை ஒட்டி பார்த்திருக்கும் விஷயங்களை, இப்போது திரையில் பார்க்கிறார்கள். இந்தக் கோணத்தில் பார்க்கும் பொழுது, திரையில் காண்பிக்கப்படும் காட்சிகள், ரசிகர்களின் கற்பனையில் இருக்கும் காட்சிகளோடு எந்த அளவிற்கு ஒத்துப்போகிறது என்பதுதான் விஷயமே. இது எழுத்துக்களை காட்சி ஆக்குவதில் இருக்கக்கூடிய சவால்தான்.
எனவேதான் காட்சிகளை பார்ப்பதை வெறுமனே பார்ப்பது (watching) என்பதிலிருந்து அதை ஒரு அனுபவமாகக் (experience) கொடுக்க வேண்டிய அவசியமும் பொறுப்பும் காட்சி ஊடகத்திற்கு ஏற்படுகிறது. இந்த புரிதலின் வெளிப்பாடுகள்தான் 3d, 4d முதல் 7d, திறந்தவெளி திரையரங்கம் (Open theater) மற்றும் சமீபத்தில் குஜராத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட படுத்துக்கொண்டே படம் பார்க்கும் திரையரங்கம் மற்றும் பல.
தொழில்நுட்பம் என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் வளர்ந்து கொண்டேதான் இருக்கும். அதற்கேற்ப ரசிகர்களின் ரசனையும் மேம்பட்டுக்கொண்டே இருந்தால், நிச்சயமாக ரசனையும் மேம்படும். கலைஞர்களும் ஊக்குவிக்கப்படுவார்கள்.
ரசனையோடு சேர்ந்த வாழ்க்கையில் என்றுமே உற்சாகம்தான். ரசித்திருப்போம் ! பகிர்வோம்! நன்றி...!
ரசனையோடு சேர்ந்த வாழ்க்கையில் என்றுமே உற்சாகம்தான். ரசித்திருப்போம் ! பகிர்வோம்! நன்றி...!
அதிர்வுகளில் இணைந்திருப்போம் !
- ந. வெங்கடேசன்
